புரட்டாசி மாத பிரதோஷம்.. சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை
பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.;
திருவலம் வில்வநாதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு பால் அபிஷேகம்
புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் வில்வநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அருகம்புல் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் தெய்வநாயகி உடனமர் சோளீஸ்வர சுவாமி கோவில், அல்லியங்கோதை உடனமர் புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில், வள்ளியரச்சல் மாந்தீஸ்வரர் கோவில், மயில் ரங்கம் தையல்நாயகி உடனமர் வைத்தியநாதேஸ்வரர் கோவில், கண்ணபுரம் வித்தக செல்வி சமேத விக்ரம சோழீஸ்வரர் கோவில், மாந்தபுரம் மாந்தீஸ்வரர் கோவில், லக்கமநாயக்கன்பட்டி அழகேஸ்வரர் கோவில், உத்தமபாளையம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில், மங்கலப்பட்டி பாண்டீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சிவபெருமானுக்கும் நந்திக்கும் பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கனிகள், மலர்கள், விபூதி, மஞ்சள், சந்தனம், பன்னீர், இளநீர் என பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவரங்குளம்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அரங்குள நாதர் பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு சிவன் சன்னதியில் உள்ள நந்தியம் பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட ஒன்பது வகையான அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மூலஸ்தானத்தில் உள்ள சுயம்புலிங்க சிவபெருமான் பெரியநாயகி அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது.
காளை வானத்தில் சுவாமி அம்பாளை எழுந்தருள செய்து பக்தர்கள் சிவசிவ ஹர ஹர கோஷத்துடன் மூன்று முறை பிரகார உலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் நந்தியம் பெருமானுக்கு மகா தீபம் காட்டினார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் திருவுடையார்பட்டி திருமூலநாதர் திரிபுரசுந்தரி அம்பாள் கோவில், திருக்கட்டளை சோமசுந்தரீஸ்வரர் மங்களநாயகி அம்பாள் கோவில், திருமலை ராய சமுத்திரம் கதிர்காமேஸ்வரர் கதிர்காமேஸ்வரி அம்பாள் கோவில், பாளையூர் பழங்கரை புராதன ஈஸ்வரர் கோவில், விஜய ரகுநாதபுரம் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை கலவை புத்தூர்
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த கலவை புத்தூர் கிராமத்தில் அமைந்திருக்கும் சிவகாமி அம்மை உடனாகிய சிதம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிதம்பரேஸ்வரர், நந்தியம் பெருமான் மற்றும் காயத்ரி அம்பாளுக்கு பலவித திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிதம்பரேஸ்வரர் பலவித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுவாமிக்கு மகா கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பட்டிவீரன்பட்டி
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் உள்ள மங்களாம்பிகை உடனுறை ஸ்ரீ ராஜராஜ சோழீஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ராஜராஜ சோழீஸ்வரரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், அய்யம்பாளையம் அருள்முருகன் கோவில் மலைக்கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவில், காந்திபுரம் சிவன் கோவில், சித்தரேவு திருச்சிற்றம்பல ஆவுடையப்பர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.
வேளுக்குடி
கூத்தாநல்லூர் அருகே உள்ள, வேளுக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் கைலாச கோலத்தில் மேற்கு முகமாய் அமர்ந்து ருத்ரகோடீஸ்வரராக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நேற்று பிரதோச வழிபாடு நடைபெற்றது. இதில், ருத்ரகோடீஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் 108லிட்டர் பால் மற்றும் தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிசேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.