சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் தசரா திருவிழா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

முத்துமாலை அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;

Update:2025-10-03 14:35 IST

ஏரல் மெயின் பஜாரில் அம்மன் சப்பர பவனி

ஏரல் அடுத்து உள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் புகழ்பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் தசரா திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

அதனைத் தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி, நையாண்டி மேளம், கரக ஆட்டம், பேண்ட் வாத்தியம் முன் செல்ல சிறுத்தொண்டநல்லூரில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த சப்பர பவனி இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு ஏரல் நட்டார் அம்மன் கோவில் வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதன்பின் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவிலை சப்பரம் அடைந்ததும், அங்கு சிறப்பு பூஜை நடந்தது. மதியம் மெயின் பஜார் வழியாக உச்சினிமாகாளி அம்மன் கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைககள் செய்யப்பட்டபிறகு அம்மன் பேட்டை பந்தலில் அமர்ந்து அருள்பாலித்தார்.

இன்று மாலையில் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் சார்பாக சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் ஏரல் நகர் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார்.  நாளை சனிக்கிழமை அதிகாலை அம்மன் கோவிலை வந்தடைகிறார். அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை, தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்