சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

தைப்பூச திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள், அரோகரா கோஷமிட்டு வழிபட்டனர்.;

Update:2026-01-23 16:04 IST

மதுரை மாவட்டம் அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் ஆறாவது படை வீடு எனும் சோலைமலை (பழமுதிர்சோலை) முருகன் கோவில் இயற்கை எழிலுடன் அமையப்பெற்றுள்ளது. இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா தனி சிறப்புடையது.

அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச விழா இன்று காலை 10.15 மணிக்கு மங்கள இசையுடன் மூலவர் சன்னதி முன்புள்ள தங்கக் கொடி மரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்தில் வண்ண மயில், வேல், சேவல், உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. மேலும் நாணல் புல், பூமாலை, பட்டாடைகள் போன்றவற்றால் தங்க கொடிமரம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தது. முன்னதாக மூலவர் சன்னதியில் வித்தக விநாயகர், மூலவர் சுவாமி, மற்றும் வேல் சன்னதியிலும் விசேஷ பூஜைகள் மஹா தீபாராதனை நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று அரோகரா கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாளை காலையில் வழக்கம்போல் அனைத்து யாக சாலை பூஜைகளும், மாலையில் அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

25ந் தேதி மாலையில் காமதேனு வாகனத்திலும், 26ந் தேதி மாலையில் ஆட்டு கிடாய் வாகனத்திலும், 27ந்தேதி பூச்சப்பரத்திலும், 28ந் தேதி யானை வாகனத்திலும் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 29ந்தேதி மாலையில் பல்லக்கிலும், 30ந்தேதி மாலையில் குதிரை வாகனத்திலும் எழுந்தருள்கிறார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக 31ந் தேதி தங்க தேரோட்டம் நடைபெறும். பிப்ரவரி 1ஆம் தேதி அன்று காலையில் தீர்த்தவாரியும், தைப்பூச மஹா அபிஷேக விழாவும் வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். தொடர்ந்து அன்று மலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறும். 

Tags:    

மேலும் செய்திகள்