நாளை பஞ்சமி தினம்.. வாராகி அம்மனின் அருள்பெற தேங்காய் தீப வழிபாடு

தஞ்சை பெரிய கோவிலில் வாராகி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். இங்கு பஞ்சமி வழிபாடு சிறப்பு வாய்ந்தது.;

Update:2026-01-22 12:53 IST

சப்த கன்னியர்களில் முக்கியமானவளான வாராகி அம்மன், பஞ்சமி திதியில் அவதரித்தார். எனவே, பஞ்சமி தினத்தன்று வாராகி அம்மனை வழிபாடு செய்வது, சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும் என்பது ஐதீகம். அவ்வகையில் தை மாத வளர்பிறை பஞ்சமி தினமான நாளை (23.1.2026) வாராகி அம்மனை வழிபட உகந்த நாளாகும். இந்த நாளில் கோவில்களில் வாராகி அம்மனுக்கு சிறப்பு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு பஞ்சமி அன்றும் வாராகி அம்மனை வழிபட்டு வருவது வாழ்வில் பலவிதமான ஏற்றங்களை கொடுக்கும் என்பது ஐதீகம். வாராகி அம்மன் எதிரிகளிடம் இருந்து நம்மை காத்து அருள்புரிய கூடிய தெய்வம். வாராகியை வழிபடுவதால் மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும்.

வீட்டில் வாராகி யந்திரம் வைத்திருப்பவர்கள், விக்கிரகம் வைத்திருப்பவர்கள், பால், தேன், இளநீர், பஞ்சாமிர்தங்களால் தேவிக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சிப்பது நன்மையளிக்கும். வாராகியை வழிபடுபவர்களுக்கு, மந்திர சித்தி, வாக்கு சித்தி கிடைக்கும். இந்த தேவியை பூஜிப்பவர்களுக்கு, செய்வினை அண்டாது என்பது நம்பிக்கை. வாராகியை வாசனைப் பூக்களால், குறிப்பாக சிவப்பு நிற பூக்களைக் கொண்டு பூஜிப்பது விசேஷம். கருப்பு உளுந்தில் செய்த வடையும், மிளகு சேர்த்த தயிர் சாதமும். சர்க்கரைவள்ளிக் கிழங்கும், சுக்கு சேர்த்த பானகமும், வாராகி தேவிக்கு சிறப்புக்குரிய நைவேத்தியங்கள்.

வாராகி அம்மனுக்கு உகந்த தீபம் தேங்காய் தீபம். எனவே, வராகி அம்மனை வழிபடுபவர்கள் நாளை தங்கள் இல்லத்தில் தேங்காய் தீபம் ஏற்றி வேண்டுதலைகளை வாராகி அம்மனிடம் முன்வைக்கலாம்.

தேங்காய தீபம் ஏற்றுவது எப்படி?

வாழை இலையை விரித்து அதில் பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும். ஒரு தேங்காயை உடைத்து அந்த தேங்காயில் இருக்கும் தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு அந்த தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் இட்டு, பரப்பி வைத்துள்ள பச்சரிசியின் மேல் வைக்க வேண்டும். பிறகு அதில் தேங்காய் எண்ணெய், நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் பக்தர்களின் நியாயமான வேண்டுதல்கள் சீக்கிரமாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.

வீட்டில் தேங்காய் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லாதவர்கள், தேங்காயை உடைத்து வைத்து அருகில் ஐந்து அகல் விளக்குகளை ஏற்றி வைத்து தீபம் ஏற்றி வழிபடலாம்.

தஞ்சை பெரிய கோவிலில் வாராகி அம்மன்:

தஞ்சையில், சோழ மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. இக்கோவிலில் தெற்கு திசையில் அம்பாள் சந்நிதிக்கு எதிரில் வாராகி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். இங்கு வாராகி அம்மன் வழிபாடு சிறப்பு வாய்ந்தது.

பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் இந்த வாராகி அம்மனை வணங்கியபின்னரே எந்த செயலையும் தொடங்குவார். குறிப்பாக, போருக்குச் செல்லும் முன்பு வாராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தாராம். அதனால் ஒவ்வொரு முறையும் அவர் வெற்றி பெற்றார். இதனால் வாராகி அம்மன் சோழர்களின் வெற்றி தெய்வம் ஆனாள். 

Tags:    

மேலும் செய்திகள்