சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா தொடங்கியது
அடுத்த மாதம் 1-ந் தேதி பகல் 12 மணிக்கு மாரியம்மனுக்கு மகாபிஷேகத்துடன் தேர்த் திருவிழா நிறைவு பெறுகிறது.;
கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து மூன்று நாட்கள் தேரோட்டம் நடைபெறுவது இந்த விழாவின் சிறப்பம்சம் ஆகும். அவ்வகையில் இந்த ஆண்டிற்கான தேர் திருவிழாவுக்காக கடந்த 12-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. 13-ந்தேதி காலை வேல் புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு பூச்சாட்டுதல் விழாவும் நடைபெற்றது.19-ந் தேதி இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது.
20-ந் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சியும் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று (21-ம் தேதி) காலை யாகசாலை பூஜை தொடங்கியது. காலை 9 மணக்கு மேளதாளங்கள், மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு மாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.
நாளை (22-ந் தேதி) முதல் 27-ந் தேதி வரை மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 28-ந் தேதி காலை 6:00 மணிக்கு பக்தர்கள் மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதனைத் தொடர்ந்து பொங்கல் விழாவும், இரவு 7 மணிக்கு மாரியம்மனுக்கு திருக்கல்யாண உச்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
29-ந்தேதி வியாழக்கிழமை காலை 5 மணிக்கு மாரியம்மன், திருத்தேருக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.
30-ந் தேதி வெள்ளிக்கிழமை 2-ம் நாள் தேர் திருவிழாவும், 31-ந் தேதி சனிக்கிழமை 3-ம் நாள் தேர் திருவிழாவும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 1-ந் தேதி பகல் 12 மணிக்கு மாரியம்மனுக்கு மகாபிஷேகத்துடன் தேர்த் திருவிழா நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ப.கந்தசாமி மற்றும் சூலக்கல் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.