தோல்வியை மாற்றும் தேவன்

தோல்விக்கு பின்னால் உள்ள செயல்பாட்டை கண்டு பிடித்து அடியோடு தூக்கி எறிந்து கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியுங்கள்.;

Update:2025-11-12 15:53 IST

தோல்வியை யாரும் விரும்புவதில்லை. அதேபோல தோற்றவனையும் யாரும் விரும்புவதில்லை. எல்லோரும் வெற்றி பெற்ற மனிதனைத் தான் நேசிப்பார்கள்.

ஆனால் கடவுள் தோல்வி அடைந்த நபரை தேடி வந்து அவனுடைய தோல்வியை மாற்றி வெற்றி பெற வைக்கிறார். அந்த வகையில் இறைவாக்கினர் யோசுவாவின் தோல்வியை இறைவன் எப்படி வெற்றியாக மாற்றினார் என்பதை அறிந்து கொள்வோம்.

யோசுவா, மோசேக்கு பின் இஸ்ரவேல் ஜனத்தை வழிநடத்தக் கூடிய பெரிய தலைவனாக காணப்பட்டான். அவன் மூலமாக கர்த்தர் எரிகோக்கோட்டையை உடைத்துப் போட்டார். யோர்தானை கடந்து வர பண்ணினார். அடுத்தபடியாக அவர்கள் எமோரியரோடு யுத்தம் பண்ணி வெற்றி பெறவேண்டும். எரியோக்கோட்டையையும் யோர்தானையும் ஜெயிப்பது என்பது லேசான காரியம் அல்ல. ஆனால் ஆண்டவர் யோசுவாவை பயன்படுத்தி வெற்றியை கட்டளையிட்டார்.

கடினமான எரிகோவை ஜெயித்து விட்டோம், எமோரியர்களை ஜெயிப்பது எளிதான காரியம் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அந்த யுத்தத்திலே இஸ்ரவேல் மக்களுக்கும், யோசுவாவுக்கும் மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டது. யோசுவா முகங்குப்புற விழுந்து, தலையில் புழுதியை போட்டுக்கொண்டு ஆண்டவரை நோக்கி முறையிட ஆரம்பித்தான். ஆண்டவர் என்னை கைவிட்டார். அதனால் தோல்வி வந்தது என்று பலவிதமாய் சிந்திக்க ஆரம்பித்தான்.

'யோசுவா தன் ஆடைகளை கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலம் மட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக் கொண்டு கிடந்தார்கள்'. (யோசுவா 7:6)

இன்றைக்கும் பலர் இப்படித்தான் நினைக்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையில் தோல்வி வந்துவிட்டது. இனி என்னால் ஜெயிக்க முடியாது என்று நினைத்துக் கொண் டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் யோசுவாவுக்கு சொன்ன வார்த்தைகளின் வழியாக தேவன் பதில் அளிக்கிறார்.

உன்னுடைய தோல்விக்கு காரணம், ஜனங்கள் என்னுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதில்லை. அவர்கள் பாவம் செய்தார்கள், சாபத்தீடானதை எடுத்துக் கொண்டார்கள். களவு செய்தார்கள். அதனால்தான் உன்னுடைய வாழ்க்கையில் தோல்வி வந்தது. நீ எழுந்திருந்து இந்த காரியங்களை சரி செய் என்று ஆண்டவர் யோசுவாவை பார்த்து சொன்னார்.

யோசுவா எழுந்திருந்து தன்னுடைய ஜனங்களுக்குள்ளே இப்படிப்பட்ட தவறு செய்த மனிதனை தேடி கண்டுபிடித்தான். அவனுடைய பெயர்தான் ஆகான். இந்த ஒரு மனிதன் செய்த தவறு முழு இஸ்ரவேல் ஜனங்களையும் தோல்வி அடையச் செய்தது. அவன் பொருட்களை கொள்ளையடித்து இருந்தான். (யோசுவா 7:21)

ஆண்டவர் அந்த பொருள்களை எல்லாம் எடுக்கக் கூடாது என்று சொன்னதை ஆகான் யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு தன் வீட்டிலே குழி தோண்டி புதைத்து வைத்திருந்தான். அவன் ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் செய்த தவறின் நிமித்தமாக முழு இஸ்ரவேல் ஜனத்திற்கும் தோல்வி ஏற்பட்டது.

சகோதரனே, சகோதரியே உங்களுடைய வாழ்க்கையிலும் ஏற்பட்டுள்ள தோல்விக்கான காரணம் என்ன என்பதை தேடிக் கொண்டு இருக்கிறீர்களா? தோல்விக்கு பின்னாக ஏதோ ஒரு தவறான செயல்பாடு உங்கள் வாழ்க்கை முறையில் இருக்கலாம். அதை கண்டு பிடித்து அடியோடு தூக்கி எறிந்து கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியுங்கள்.

யோசுவா தோல்விக்கான காரணம் அறிந்து, செய்த செயலுக்கு பின் என்ன நடந்தது தெரியுமா? அதே எமோரியர்கள் இஸ்ரவேல் ஜனத்திற்கு விரோதமாகவும், யோசுவாவுக்கு விரோதமாகவும் யுத்தத்திற்கு வந்தார்கள். யுத்தத்திற்கு வந்த இடம் எமோரியருக்கு மிகவும் பழக்கமான இடமாக இருந்தது. யோசுவாவுக்கும் அவனுடைய ஜனங்களுக்கும் பழக்கம் இல்லாத இடமாக இருந்தது. யுத்தம் நீடித்துக் கொண்டே போகும், சூரியன் மறையும்போது இருள் கடந்து வரும். நமக்கு பழக்கமான இடம் என்பதால் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என எமோரியர்கள் நினைத்தார்கள்.

பழக்கம் இல்லாத இடத்தில் இருள் வந்தால் நாம் தோல்வி அடைந்து விடுவோம் என்று யோசுவா நினைத்தார். அதனால் சூரியனை பார்த்து, 'சூரியனே நீ கிபியோன் மேலும், சந்திரனே நீ ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும் தரித்து இரு' என்றான் (யோசுவா 10:12).

அதேபோல சூரியனும் சந்திரனும் நின்றது. இஸ்ரவேல் மக்கள் அந்த வெளிச்சத்தை பயன்படுத்தி எம்மோரிடத்திலே யுத்தம் பண்ணி வெற்றி பெற்றார்கள்.

தோல்வியுற்று முகம் குப்புற விழுந்து கிடந்த மனிதனுக்கு கடவுள் பெரிய வெற்றியைக் கொடுத்தார். சூரியனையும் சந்திரனையும் ஒரே இடத்தில் நிற்க வைக்க வல்லவரான கடவுள், தோல்வி அடைந்த உங்களை பெரிய வெற்றிகளை காணச் செய்வார். ஆமேன்.

-டதி கிறிஸ்து தாஸ், ரீத்தாபுரம், கன்னியாகுமரி மாவட்டம்.

Tags:    

மேலும் செய்திகள்