ஆடி அமாவாசையின் அளவற்ற ஆற்றல்

பித்ரு தர்ப்பணத்தை முறையாக செய்து குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்யும் ஒருவரை எந்த தோஷமும் பாதிப்பதில்லை என்பது நம்பிக்கை.;

Update:2025-07-20 12:46 IST

தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து படையலிட்டு வணங்குவதற்கு உகந்த நாளாகும். பொதுவாக ஒரு வருடத்திற்கு 96 முறை முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசையில் செய்யலாம். அன்று பித்ருலோகத்திலிருந்து தேடி வரும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பதே சாஸ்திரம் சொல்ல கூடிய விதி ஆகும்.

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம், சந்திரனின் ஆட்சிபெற்ற வீடு. சூரியன் சிவ அம்சம், ஆடி அமாவாசையின்போது சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனுடன் ஒன்று சேர்வதால் சந்திரனின் ஆட்சி பலமடைகிறது. ஆகவேதான், ஆடி அமாவாசை வழிபாட்டுக்கு உகந்த நாளாக கூறப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுவதாகவும், அன்றைய தினம் புனித தலங்களில் உள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும் என்றும் நம்பப்படுகிறது.

வருடத்தில் முக்கியமான மூன்று அமாவாசையில் அதாவது, ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய நாட்களில் திதி தர்ப்பணம் கொடுப்பது நல்ல பலனை தரும். தட்சிணாயன காலம் துவங்கி முதலில் வரக்கூடிய அமாவாசை, ஆடி அமாவாசையாகும். ஆகவே ஆடி அமாவாசை சிறப்பு பெறுகிறது.

மேலும் கடக ராசியில் குரு உச்சம் பெறுகிறார். குரு என்பவர் முன்னோர்களை குறிக்கும் கிரகமாகும். மேலும் புத்திர பாக்கியத்தை கொடுக்கும் கிரகமும் அவரே ஆவார். ஆகவே பித்ரு தர்ப்பணத்தை முறையாக மேற்கொண்டால் குடும்பத்தில் வாரிசுகளின் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

ஜோதிட ரீதியாக பார்த்தால் இருப்பதிலேயே "பித்ரு தோஷமே" தலையாய தோஷமாக கருதப்படுகிறது. பித்ரு தர்ப்பணத்தை முறையாக செய்து குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்யும் ஒருவரை எந்த தோஷமும் பாதிப்பதில்லை என்பது நம்பிக்கை. முன்னோர்களின் ஆசிர்வாதம் இவர்களை கவசமாக பாதுகாப்பதாக சாஸ்திரம் கூறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்