சபரிமலையில் மகர விளக்கு பூஜை நாளையுடன் நிறைவு

மாசி மாத பூஜைக்காக மீண்டும் அடுத்த மாதம் 12-ந் தேதி திறக்கப்படும்.;

Update:2026-01-19 07:06 IST

திருவனந்தபுரம்,

சபரிமலையில் 2025-26-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசன் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. பிரசித்தி பெற்ற மண்டல பூஜை கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்றது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக 30-ந் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, கடந்த 14-ந் தேதி முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக அய்யப்பன் மகர ஜோதி வடிவில் பக்தர்கள் காட்சி அளித்தார்.

நடப்பு சீசனை முன்னிட்டு நேற்றுடன் நெய்யபிஷேக, களபாபிஷேக வழிபாடுகள் நிறைவடைந்தது. கோவிலில் இன்று (திங்கட்கிழமை) இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து இரவு மாளிகப்புரத்து குருதி சமர்ப்பன சடங்குகளுக்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.

நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவாக நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். காலை 6.30 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சாமி தரிசனத்திற்கு பிறகு நடை அடைக்கப்படும். நாளை பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை. அத்துடன் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுடன், தை மாத பூஜை வழிபாடுகளும் நிறைவு பெறும்.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 17-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். 

Tags:    

மேலும் செய்திகள்