உத்தராயணம், தட்சிணாயனம் என்றால் என்ன?

சூரியன் வடக்கு திசையை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும் தை மாதம் முதல் நாள் உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்க நாள் ஆகும்.;

Update:2026-01-18 15:38 IST

மனிதர்களுக்கு பகல் மற்றும் இரவு இருப்பது போல தேவர்களுக்கும் பகல் மற்றும் இரவு இருக்கிறது. மனிதர்களின் ஒரு நாள், 24 மணி நேரமாக அதில் 12 மணி நேரம் பகல் மற்றும் 12 மணி நேரம் இரவு என்று பிரிக்கப்பட்டு இருக்கிறது. மனிதர்களின் ஒரு ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாளாக கருதப்படுகிறது. ஒரு ஆண்டின் ஆறு மாதம் பகலாகவும் ஆறு மாதம் இரவாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். அதாவது தேவர்களின் பகல் நேரம் உத்தராயண புண்ணிய காலம் என்றும் இரவு நேரம் தட்சிணாயன புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது.

சூரியனின் நகர்வின் அடிப்படையில் இயற்கையாக இந்த காலங்கள் அமைந்துள்ளன. உத்தராயணம் என்றால் வடக்கு என்று பொருள். அயனம் என்றால் பயணம். சூரியன் வடக்கு திசையை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும் நாள், அதாவது தை மாதம் முதல் நாள் உத்தரயண புண்ணிய காலத்தின் தொடக்க நாள் ஆகும். தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயணம் ஆனி வரை இருக்கிறது. இந்த ஆறு மாத காலத்திற்கு சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிறார்.

இது முடிந்தவுடன் ஆடி மாதம் முதல் நாள் சூரியன் தென்திசை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்குகிறார். இதை தட்சிணாயனம் என்று அழைக்கிறார்கள். ஆடி மாதம் முதல் நாள் தெற்கு நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கும் சூரியன், அடுத்த ஆறு மாதங்களுக்கு அதாவது பங்குனி மாதம் வரை தெற்கு நோக்கியே பயணிக்கிறார்.

உத்தராயண காலத்தின் பகல் பொழுது நீளமாகவும், தட்சிணாயன காலத்தில் இரவுப் பொழுது நீளமாகவும் இருப்பதை நாம் பார்க்க முடியும்.

உத்தராயண புண்யகாலத்தின் தொடக்க நாளான தை மாத முதல் நாளன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அன்று மகர சங்கராந்தி பண்டிகையும் கொண்டாடப்பட்டு பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபடுகிறோம். அதேபோல தட்சிணாயனத்தின் தொடக்க நாளான ஆடி மாத முதல் நாளிலும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.

தேவர்களின் மாலைப்பொழுதாக தட்சிணாயனம் வருவதால் பெரும்பாலான பண்டிகைகள் அந்தக் காலத்தில் இருப்பதைக் காணலாம். குளிர்ச்சியான தட்சிணாயன காலம் பண்டிகை, கொண்டாட்டங்களுக்கு ஏற்றதாக இருக்கும். தட்சிணாயனத்தின் தொடக்க மாதமாகிய ஆடி மாதத்திலேயே ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் வரலட்சுமி விரதம் என்று அம்பிகை, மகாலட்சுமி ஆகியோருக்கு மிகவும் விசேஷ நாட்களாகக் கொண்டாடப்படுகின்றன.

ஆடியைத் தொடர்ந்து வரும் ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி, ஐப்பசி மாதத்தில் தீபாவளி, கார்த்திகை மாதத்தில் தீபத் திருவிழா, மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் இப்படி பல முக்கியமான பண்டிகைகள் யாவும் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வருவதைக் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்