திருப்பதி கோதண்டராமர் பேட்டை உற்சவம்

கோதண்டராமர் கோவிலில் இருந்து உற்சவர்கள் மேள தாளம், மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று திரும்பினர்.;

Update:2025-02-14 11:00 IST

திருப்பதி:

மாக மாத பவுர்ணமியையொட்டி திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பேட்டை உற்சவம் விமரிசையாக நடைபெறும். அதையொட்டி கோவிலில் இருந்து உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர் மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக கூப்புச்சந்திரப்பேட்டை கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று பேட்டை உற்சவம் நடத்தப்பட்டது. அதற்காக, கோவிலில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூப்புச்சந்திரப்பேட்டை கிராமத்துக்கு உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர் நேற்று காலை 6 மணியளவில் மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க புறப்பட்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்று காலை 8 மணியளவில் கூப்புச்சந்திரப்பேட்டை கிராமத்தை அடைந்தனர்.

அங்கு காலை 10 முதல் 11.30 மணி வரை உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதன்பிறகு மாலை 4 முதல் 5 மணி வரை ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. ஊஞ்சல் சேவை முடிந்ததும், கூப்புச்சந்திரப்பேட்டை கிராமத்தில் இருந்து மாலை 5.30 மணியளவில் உற்சவர்கள் புறப்பட்டு இரவு 9 மணியளவில் கோவிலை அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்