மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்
கோவிலில் இருந்து பல்லக்கில் வந்த ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பெருமாள், தீவட்டி பரிவாரங்களுடன், மேள தாளம் முழங்க தெப்பத்தில் எழுந்தருளினார்.;
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்றதும், பெருமையும் நிறைந்த கள்ளழகர் கோவிலின் உப கோவிலானது, மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் ஆகும். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது புரட்டாசி பெருந்திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா கடந்த 24-ந் தேதி காலையில் மங்கள இசையுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தினமும் அன்னம், அனுமார், கருடன், சேஷ, யானை உள்ளிட்ட பல வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மேலும் பூப்பல்லக்கு, திருமுக்குளத்தில் தீர்த்தவாரியும், திருத்தேரோட்ட விழாவும் நடந்தது
நேற்று காலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நடந்தது. இதற்கு முன்னேற்பாடாக முல்லைபெரியாறு கால்வாயில் இருந்து பிரத்யேகமாக கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து முன்கூட்டியே தெப்பக்குளம் முழுவதுமாக நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில், அன்னப்பல்லக்கு போன்று தயார் செய்யப்பட்ட தெப்பம் அலங்கரித்து வைக்கப்பட்டது.
கோவிலில் இருந்து பல்லக்கில் வந்த ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பெருமாள், தீவட்டி பரிவாரங்களுடன், மேள தாளம் முழங்க தெப்பக்குளத்தில் உள்ள அன்னப் பல்லக்கில் எழுந்தருளினார். பின்னர் தெப்ப உற்சவம் தொடங்கியது. தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த பகவான், மேற்கு புறம் உள்ள அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அங்கு நூபுரகங்கை தீர்த்தத்தினால் பட்டர்களின் வேதமந்திரங்களுடன் பூஜைகளும் தீபாராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மாலையிலும் அதே தெப்பத்தில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சகல பரிவாரங்களுடன் பெருமாள் கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார். 5-ந்தேதி இன்று உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் யக்ஞ நாராயணன், மற்றும் அறங்காவலர்கள், கண்காணிப்பாளர்கள் . உதவி பொறியாளர்கள், மக்கள் தொடர்பு அலுவலர், பணியாளர்கள் செய்திருந்தனர்.