ஆடி மாதத்தில் வரும் இரண்டு கிருத்திகை; எதில் விரதம் இருக்கலாம்?
ஆடிக் கிருத்திகையில் விரதம் இருந்து முருகப் பெருமானின் அருளையும், அவரது அருளால் வேண்டியதை பெறுவதற்கும் முருக பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.;
கார்த்திகை விரதம் :
அம்பாளுக்கு உரிய ஆடி மாதத்தில் முருகப் பெருமானின் அருளை பெறுவதற்குரிய மிக முக்கியமான நாள் தான் ஆடிக் கிருத்திகை. வழக்கமாக குழந்தை வரம் வேண்டும், திருமணம் நடைபெற வேண்டும் என்பவர்கள் கிருத்தி கையில் முருகப் பெருமானை வேண்டி விரதம் இருந்தால் விரைவில் வேண்டுதல் நிறை வேறும் என்பது நம்பிக்கை. அதிலும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகையில் விரதம் இருந்து வழிபட்டால் அம்பிகையின் அருளும், முருகப் பெருமானின் அருளும் சேர்ந்தே கிடைக்கும். அதனால் இரட்டிப்பு பலனை தரக் கூடிய திருநாளாக ஆடிக் கிருத்தி கை கொண்டாடப்படுகிறது.
ஆடிக் கிருத்திகை தேதி எது?
2025ம் ஆண்டின் ஆடி மாதத்தில் இரண்டு முறை கிருத்திகை நட்சத்திரம் வருகிறது. அதன்படி இன்று (ஜூலை 20) கிருத்திகை நாள் இதே போல் ஆடி கடைசியில் அதாவது ஆகஸ்ட் 16-ம் தேதி கிருத்திகை நாள் ஆகும். இவ்வாறு இரண்டு கிருத்திகை வருவதால் எந்த நாளில் முருகனுக்கு விரதம் இருப்பது என பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முருகன் கோவிலிலும் ஒவ்வொரு நாளில் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாட போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதில் எந்த நாளில், எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். பொதுவாக ஒரு மாதத்தில் இரண்டு முறை ஒரு நட்சத்திரம் வந்தால் இரண்டாவதாக வரும் நட்சத்திரத்தை தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என பஞ்சாங்க சாஸ்திரம் சொல்கிறது. அதன்படி பார்த்தால் ஆகஸ்ட் 16ம் தேதி தான் ஆடிக்கிருத்திகை.
எந்த நாளில் ஆடிக் கிருத்திகை விரதம் இருக்க வேண்டும்?
ஆடி முதல் கிருத்திகையான இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விரதம் இருக்க, பூஜை செய்ய, கோவிலுக்கு செல்ல வசதியாக இருக்கும் என பலர் நினைப்பதுண்டு. அதனால் இரண்டில் எந்த நாளில் விரதம் இருந்தாலும் முருகப் பெருமானின் அருள் கிடைக்கும்.
சாதாரணமாக கிருத்திகை விரதம் இருப்பவர் இன்றும், குழந்தை மற்றும் திருமணத்திற்காக வேண்டி பட்டினியாக இருந்து கிருத்திகை விரதம் இருப்பவர்கள் ஆகஸ்ட் 16ம் தேதியும் விரதம் இருப்பது சிறப்பு. இரண்டுமே சிறப்புக்குரிய நாள் என்பதால் எந்த நாளில் முடிகிறதோ அந்த நாளிலோ அல்லது இரண்டு நாட்களிலோ விரதம் இருக்கலாம்.
ஆகஸ்ட் 16 அன்று யார் விரதம் இருக்கலாம்?
கடன் பிரச்சனையால், தாங்க முடியாத சிக்கல்கள், பிரச்சனையில் இருப்பவர்கள் ஆகஸ்ட் 16ம் தேதி விரதம் இருந்து வழிபடலாம். காரணம், அன்றைய தினம் தேய்பிறை அஷ்டமியுடன் இணைந்து வருகிறது. அன்றைய தினம் அதிகாலை 01.16 மணிக்கே அஷ்டமி திதி துவங்கி, நாள் முழுவதும் அஷ்டமி உள்ளது. அன்று கிருஷ்ணர் அவதரித்த கோகுலாஷ்டமி நாளும் கூட. இந்த நாளில் கால பைரவரையும், முருகப் பெருமானையும், அம்பிகையை வழிபட்டால் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும். இந்த நாளில் விரதம் இருந்தால் கிருத்திகை விரதம் இருந்த பலனும், தேய்பிறை அஷ்டமி இருந்த பலனும் கிடைக்கும். ஒரு விஷயம் கண்டிப்பாக நடந்தே தீர வேண்டும் என்பவர்கள் ஆடிக்கிருத்திகை அன்று முழு நேரம் பட்டினியாக இருந்து விரதம் இருக்கலாம்.
ஆடிக் கிருத்திகை விரதம் இருக்கும் முறை :
இன்று அதிகாலை 12.14 மணி துவங்கி, இரவு 10.36 வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது. அதே போல் ஆகஸ்ட் 16ம் தேதி காலை 08.27 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 17ம் தேதி காலை 06.48 மணி வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது. இதனால் ஆடிக்கிருத்திகை விரதம் இருப்பவர்கள் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து விட்டு விரதத்தை துவக்கி விடலாம். முடிந்தவர்கள் முழு உபவாசமாகவும், முடியாதவர்கள் பால்,பழம் மட்டும் சாப்பிட்டும் விரதம் இருக்கலாம். முருகப் பெருமானுக்கு சிவப்பு நிற மலர்கள் சூட்டி, ஷட்கோண கோலமிட்டு, அதன் மீது ஆறு அகல் விளக்குகளில் விளக்கேற்ற வேண்டும். நைவேத்தியமாக காய்ச்சி பால் தேன் கலந்து வைத்து படைக்கலாம். கந்தசஷ்டிகவசம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், திருப்புகழ் என எது தெரியுமோ அதை படித்து வழிபடலாம். முருகப் பெருமானுக்குரிய மந்திரங்கள் தெரியும் என்றால் அதை சொல்லியும் வழிபடலாம். எதுவும் தெரியாது என்றால் "ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை 1008 முறையோ அல்லது 108 முறையோ சொல்லி வழிபடலாம்.
விரதம் நிறைவு செய்யும் முறை :
முடிந்தவர்கள் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபடலாம். முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுக்கலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வழிபடலாம். அன்றைய தினம் யாருக்காவது தானம் அளிப்பது சிறந்தது. அன்றைய தினம் முருகப் பெருமானை வழிபடுவதுடன் அம்பிகையையும் மனதார நினைத்து வழிபட வேண்டும். காலையில் வழிபட்டதை போலவே மாலையிலும் ஷட்கோண தீபம் ஏற்றி வழிபட வேண்டும். முருகனுக்குரிய பாடல்கள், மந்திரங்களை சொல்லி வழிபட்ட பிறகு விரதத்தை நிறைவு செய்யலாம். இந்த முறையில் ஆடிக் கிருத்திகை விரதம் இருந்தால் முருகப் பெருமானின் அருள் நிச்சயம் கிடைக்கும்.