குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா தோன்றியது எப்படி?
ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1-ந் தேதி கெங்கை அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறும்.;
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரத்தில் கவுண்டன்ய மகாநதியின் கரை ஓரத்தில் அருள்மிகு கெங்கை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வாரி வழங்கி நல்லாசி புரிகிறாள். மிகவும் புராதனம் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1-ந் தேதி கெங்கை அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபடுகிறார்கள்.
கெங்கையம்மன் வரலாறு
விதர்ப தேசத்தை ஆண்டு வந்த மன்னன் விஜரவதன், தான் தவமிருந்து பெற்ற மகளான ரேணுகா தேவியை (கெங்கையம்மனை) ஜமதக்னி முனிவருக்கு திருமணம் செய்து வைத்தார். ஜமதக்னி- ரேணுகாதேவி தம்பதியருக்கு மகா விஷ்ணுவின் அம்சமான பரசுராமன் உட்பட ஐந்து குழந்தைகள் பிறந்தனர்.
ரேணுகாதேவி நாள்தோறும் தாமரை குளத்தில் நீராட செல்வது வழக்கம். நீராட செல்லும்போது மண்ணால் குடம் செய்து, நீராடிவிட்டு திரும்பி வரும்போது மண் குடத்தில் தண்ணீர் எடுத்து வருவார். அதேபோல் ஒருநாள் ரேணுகாதேவி தாமரை குளத்திற்கு சென்று நீராடி உள்ளார். அப்போது வான்வழியே சென்ற கந்தர்வனின் நிழல் குளத்தில் தெரிந்துள்ளது. அந்த கந்தர்வன் அழகில் சில நொடிகள் ரேணுகாதேவி மயங்கி உள்ளாள். இதை ஞான திருஷ்டி மூலம் உணர்ந்த ஜமதக்னி முனிவர், தனது மனைவி கற்பு நெறியை தவறி விட்டதாக கடும் கோபம் கொண்டார். இந்த குற்றத்திற்கு தண்டனையாக தனது மகன் பரசுராமனிடம் உனது தாயின் தலையை வெட்டி கொண்டு வா என ஆணையிட்டார். தந்தை சொல்லை வேத வாக்காக எடுத்துக் கொண்ட பரசுராமன் ஏன், எதற்கு என கேள்வி கேட்காமல் தனது தாயின் தலையை வெட்ட புறப்பட்டார்.
தாயின் தலையை வெட்டிய பரசுராமர்
தனது மகனே தன் தலையை வெட்ட வருவதை கண்ட ரேணுகாதேவி மகனால் வெட்டப்பட்டு இறப்பதை விட தனது உயிரை தானே மாய்த்துக் கொள்வதே மேல் என முடிவு செய்து ஓடத் துவங்கினாள். அப்போது சலவை தொழிலாளி ஒருவரது வீட்டில் மறைந்து கொண்டாள். அங்கும் பரசுராமன் வரவே கடலில் வீழ்ந்து இறப்பதே மேல் என முடிவு செய்து கடலை நோக்கி ஓடினாள். தொடர்ந்து ரேணுகாதேவியை பரசுராமன் விரட்டி வந்தார். அப்போது ரேணுகாதேவி வெட்டியான் ஒருவரது வீட்டில் பதுங்கி கொண்டார். இதனை அறிந்த பரசுராமன் அங்குவந்து தனது தாயின் தலையை வெட்ட முயன்றார். அதனை தடுத்த வெட்டியானின் மனைவி சண்டாளச்சியின் தலையை வெட்டினார். பின்னர் தனது தாயின் தலையை வெட்டினார்.
உயிர்பெற்ற கெங்கையம்மன்
பின்பு தனது தந்தையிடம் சென்ற பரசுராமன், உங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன் என கூறினார். அப்போது ஜமதக்னி முனிவர் தனது மகனிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். அதனை தருகிறேன் என கூறினார். அப்போது பரசுராமன் தனது தாயை உயிர்பித்து தருமாறு வேண்டினார். அப்போது ஜமதக்னி முனிவர் ஒரு பாத்திரத்தில் புனித நீரை கொடுத்து இந்த தண்ணீரை கொண்டு வெட்டப்பட்டு கிடக்கும் உடலுடன் தலையை சேர்த்து வைத்து உயிர்ப்பித்து கொள் என்றார். இதனையடுத்து மகிழ்ச்சியில் திளைத்த பரசுராமன், வேகமாக சென்று உயிர்ப்பிக்கும்போது அவசரத்தில் சண்டாளச்சியின் உடலில் ரேணுகாதேவியின் தலையையும், ரேணுகாதேவியின் உடலில் சண்டாளச்சியின் தலையையும் வைத்து புனிதநீரை தெளித்தார். இதன்பின்னர் ரேணுகாதேவியும், சண்டாளச்சியும் உயிர் பெற்றனர்.
இந்த புராணத்தை கொண்டுதான் குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் 1-ந் தேதி சிரசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது கெங்கையம்மன் கோவிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, கெங்கையம்மன் கோவில் சிரசு மண்டபத்தில் உள்ள சண்டாளச்சியின் உடலில் பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படும்.