குளிர்காலத்தில் கொய்யாப்பழம்... இத்தனை நன்மைகளா..?
கொய்யாப்பழம் மற்றும் அதன் இலை சாறு சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்சிடென்ட் செயல்பாடு கொண்டவை.;
குளிர்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பருவகாலப் பழங்களில் கொய்யாப்பழம் முக்கியமானது. வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் பயிரிடப்பட்டாலும் குளிர்காலத்திலேயே அதிகமாக அறுவடை செய்யப்பட்டு சந்தைக்கு வருகிறது. 100 கிராம் கொய்யா பழத்தில் 80.8 கிராம் நீர்ச்சத்து, 68 கலோரிகள், 14.32 கிராம் கார்போஹைட்ரேட், 5.4 கிராம் நார்ச்சத்து, 2.55 கிராம் புரதச்சத்து, 417 மில்லி கிராம் பொட்டாசியம், 18 மில்லி கிராம் கால்சியம், 22 மில்லி கிராம் மெக்னீசியம், 0.26 மில்லி கிராம் இரும்புச்சத்து, 228.3 மில்லி கிராம் அஸ்கார்பிக் அமிலம், நியாசின், தையமின், பைரிடாக்சின் மற்றும் சயனோ கோபாலமின் உள்ளிட்ட வைட்டமின்கள் இடம் பெற்றிருக்கின்றன.
குளிர் காலத்தில் ஏன் கொய்யாப்பழம் சாப்பிட வேண்டும்?
* கொய்யாப்பழம் மற்றும் அதன் இலை சாறு சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்சிடென்ட் செயல்பாடு கொண்டவை. அவை பிரீ ராடிக்கல்களை கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
* கொய்யா இலைச்சாறு, வயிற்றுப் புண்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. வயிற்று அமில செயல்பாடுகளையும் ஊக்குவிக்கக்கூடியது.
* சர்க்கரை நோய் மற்றும் அதிக எடை கொண்ட விலங்கை மாதிரியாக கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் கொய்யா இலைச்சாறு ரத்த சர்க்கரை அளவை குறைத்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
* ஈ-கோலை, சால்மோனெல்லா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக கொய்யா விதை மற்றும் இலைச் சாறுகள் செயல்பட்டு நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை கொண்டிருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
* கொய்யாப்பழ சாறில் இருக்கும் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நரம்பு, தசை மற்றும் ரத்த ஓட்ட செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
* மேலும் கொய்யாப்பழத்தில் இருக்கும் சாறில் லைகோபீன், பீட்டா கரோட்டின் போன்ற கரோட்டினாய்டுகள் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும் திறன் கொண்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.