மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை உயர்வு
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.6,000 அதிகரித்து, ஒரு கிலோ ரூ.2,80,000 ஆக உயர்ந்துள்ளது;
சென்னை,
2025-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தங்கம், வெள்ளி விலை அதிக ஏற்றத்தை கண்டுவந்து, அவ்வப்போது புதிய உச்சத்தை தொட்டு வரலாற்றுச் சாதனை படைத்து வருகிறது. அதிலும் சமீப காலமாக தங்கத்தைவிட வெள்ளியின் விலையானது மிகவும் கடுமையாக உயர்ந்து வருகிறது.வெள்ளியின் விலை இதுவரை வரலாறு கண்டிராத வகையில், இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20,000 அதிகரித்துள்ளது. இதுபோல வெள்ளி இதுவரை இப்படி விலை உயர்ந்தது இல்லை. இன்று ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,74,000-க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.274-க்கும் விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,54,000-க்கும், ஒரு கிராம் ரூ.254-க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு ஒரு கிலோ வெள்ளி ரூ.49,000-க்கு விற்கப்பட்டது. 2021-ம் ஆண்டு ரூ.72,000 ஆக உயர்ந்தது. 2023-ம் ஆண்டு ரூ.74,000-க்கு விற்கப்பட்டது. 2024-ம் ஆண்டு ரூ.80,000 ஆக உயர்ந்தது.இந்த ஆண்டு, ஜனவரி 1-ந்தேதி ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000-க்கு விற்கப்பட்டது. ஜனவரி 3-ந்தேதி கிலோ ரூ.1,00,000-த்தை எட்டியது. கடந்த 3-ந்தேதி கிலோ ரூ.2,00,000-த்தை தாண்டியது. இந்த நிலையில் இன்று ரூ.2,74,000-க்கு விற்கப்படுகிறது.இந்த ஆண்டில் இதுவரை கிலோவுக்கு ரூ.1,76,000 அதிகரித்துள்ளது. இது எந்த ஆண்டிலும் இல்லாத விலை உயர்வாகும்.
இதேபோல், தங்கம் விலை இன்று தொடர்ந்து 8-வது நாளாக உயர்ந்து வருகிறது. சென்னையில் கடந்த 19-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.99,040-க்கு விற்கப்பட்டது. 20-ந்தேதி தங்கம் விலை ரூ.99,200 ஆக உயர்ந்தது. 22-ந்தேதி மேலும் அதிகரித்து ரூ.1,00,560-க்கு விற்கப்பட்டது. 23-ந்தேதி மீண்டும் உயர்ந்து ரூ.1,02,160-க்கு விற்பனையாகியது. 24-ந்தேதி பவுன் விலை ரூ.1,02,400 ஆக உயர்ந்தது. 25-ந்தேதி மேலும் உயர்ந்து ரூ.1,02,560-க்கு விற்கப்பட்டது.நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.1,03,120 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை பவுன் ரூ.1,04,000-க்கு உயர்ந்தது. இதன் மூலம் வெள்ளியைப் போல தங்கம் விலையும் இன்று புதிய உச்சத்தை எட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.880 உயர்ந்தது. காலையில் தான் உயர்ந்தது என்றால் மாலையிலும் மேலும் அதிகரித்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது. அதாவது, தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.6,000 அதிகரித்து, ஒரு கிலோ ரூ.2,80,000 ஆக உயர்ந்துள்ளது