24 ஆண்டு கால கொலை வழக்கு; சோட்டா ராஜனின் ஜாமீனை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

4 வழக்குகளில் ராஜன் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது என சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு கூறினார்.;

Update:2025-09-17 21:16 IST

புதுடெல்லி,

நிழலுலக தாதாக்களில் ஒருவர் சோட்டா ராஜன். ராஜேந்திர சதாசிவ நிகல்ஜே என்ற இயற்பெயரை கொண்ட அவருக்கு எதிராக கடத்தல், கொலை முயற்சி, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், 2001-ம் ஆண்டு நடந்த ஜெயா ஷெட்டி என்பவரின் கொலை வழக்கில், கடந்த 2024-ம் ஆண்டு மே மாதத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

எனினும், பாம்பே ஐகோர்ட்டில் 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், சோட்டா ராஜனுக்கான ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதனை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு, 2 கொலை வழக்குகள் உள்பட 4 வழக்குகளில் ராஜன் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது என அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளார்.

ஆனால், சோட்டா ராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவருக்கு எதிராக எந்தவித சான்றும் இல்லை என கூறினார். எனினும், சோட்டா ராஜன் 4 வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அவருக்கு ஏன் தண்டனை ரத்து செய்யப்பட்டு உள்ளது? என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.

சாட்சிகள் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல முன்வரவில்லை. அதனால், பல வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார் என்றும் கூறிய சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கில், வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்