குடிப்பழக்கத்தை மறக்க நாட்டு மருந்து சாப்பிட்ட பெண் உள்பட 4 பேர் பலி

போலி நாட்டு வைத்தியர் சாயப்பா கொடுத்த நாட்டு மருந்து விஷமாக மாறி 4 பேர் பலியானதாக கூறப்படுகிறது.;

Update:2025-08-08 10:15 IST

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டம் சேடம் தாலுகா இமடாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சாயப்பா என்ற தாயப்பா. இவர், நாட்டு வைத்தியர் ஆவார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நாட்டு மருந்துகளை சாப்பிட்டால் குடி பழக்கத்தை கைவிட்டு குணமடையலாம் என்று சாயப்பா கூறி வந்தார். அதன்படி, சேடம் அருகே புரகபள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமி, சித்தாப்புரா தாலுகா பீமனஹள்ளியை சேர்ந்த மனோகர், சகாபாத் டவுனை சேர்ந்த கணேஷ் ராத்தோட், நாகேஷ் ஆகிய 4 பேரும் இமடாபுரா கிராமத்திற்கு நேற்று முன்தினம் வந்திருந்தனர்.

பின்னர் குடிப்பழக்கத்தை மறப்பதற்காக சாயப்பா கொடுத்த நாட்டு மருந்தை 4 பேரும் வாங்கி குடித்துள்ளனர். அதே நேரத்தில் 4 பேரின் மூக்கு வழியாகவும் நாட்டு மருந்தை சாயப்பா ஊற்றி இருந்தார். அதன்பிறகு, திடீரென்று 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் நலக் கோளாறு பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக 4 பேரும் கலபுரகி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு லட்சுமி, கணேஷ் ராத்தோட் உயிரிழந்தனர்.

மனோகர், நாகேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர்களும் நேற்று அதிகாலையில் உயிரிழந்தார்கள். இதனால் குடிப்பழக்கத்தை நிறுத்த நாட்டு மருந்து சாப்பிட்டு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் கலபுரகியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து சேடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சாயப்பா போலி நாட்டு வைத்தியர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலி நாட்டு வைத்தியரான சாயப்பாவை கைது செய்ய தீவிரம் காட்டினார்கள். அப்போது தெலுங்கானா மாநிலத்தில் அவர் தலைமறைவாக இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே நேற்று காலையில் சேடம் போலீசார், தெலுங்கானா விரைந்தனர். பின்னர் தனது தங்கையின் வீட்டில் பதுங்கி இருந்த சாயப்பாவை கைது செய்தார்கள். அவரை, சேடம் அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாயப்பா கொடுத்த நாட்டு மருந்து விஷமாக மாறி 4 பேர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் 4 பேரின் சாவுக்கு சரியான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்