பீகாரில் 20 ஆண்டுகளில் 70 ஆயிரம் படுகொலைகள்; ராஷ்டீரிய ஜனதா தளம் பரபரப்பு குற்றச்சாட்டு
பீகாரில் காவல் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் கூட இல்லை என சஞ்சய் யாதவ், குற்றச்சாட்டு கூறியுள்ளார்.;
பாட்னா,
பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த, முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணியில் பா.ஜ.க. உள்ளது. இந்த நிலையில், பாட்னா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் யாதவ், நிதிஷ் குமார் ஆட்சியை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
அவர் கூறும்போது, பீகாரில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. கடந்த 2 தசாப்தங்களில் (20 ஆண்டுகளில்) 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளன என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். பீகாரில் எத்தனை சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளன?
அவர்களுடைய காவல் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் கூட இல்லை. ஆனால், தேர்தலின்போது ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.10 ஆயிரம் கொடுக்கின்றனர் என்றார்.
அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடந்த வாரம் பேசும்போது, மாதேபுரா, ககாரியா மற்றும் பாட்னா நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் நிதிஷ் அரசு செயல்படுகிறது என்று குற்றச்சாட்டாக கூறினார்.