டிஜிட்டல் இந்தியாவால் புதிய பொருளாதாரம்... ரோஜ்கார் மேளாவில் 61 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பிரதமர் மோடி பேச்சு

21 லட்சம் இளைஞர்கள் பணியாற்ற கூடிய வகையில் 2 லட்சம் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன என பிரதமர் மோடி கூறினார்.;

Update:2026-01-24 15:50 IST

புதுடெல்லி,

நாட்டில் மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், சிறப்பு பணி நியமனங்கள் மூலம் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் காலி இடங்களை நிரப்பிட பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் ரோஜ்கார் மேளா என்ற திட்டம் பிரதமர் மோடியால் 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்படி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அரசின் அஞ்சல் துறை, இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறை, அணு ஆற்றல் துறை, வருவாய், உயர் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் இந்த திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நாடு முழுவதும் பணி நியமன கடிதங்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், டெல்லியில் இன்று நடந்த ரோஜ்கார் மேளா நிகழ்ச்சியின் கீழ் பிரதமர் மோடி, 61 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதன்பின்னர் அவர்களுக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, 21 லட்சம் இளைஞர்கள் பணியாற்ற கூடிய வகையில் 2 லட்சம் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. இதேபோன்று, டிஜிட்டல் இந்தியாவால் புதிய பொருளாதாரம் ஏற்பட்டு உள்ளது.

அனிமேஷன் மற்றும் டிஜிட்டல் மீடியா போன்ற துறைகளில் உலகளாவிய மையங்களில் ஒன்றாக நம் நாடு உருவாகி வருகிறது. டிஜிட்டல் தளங்களில் படைப்புகளை வெளியிட்டு பணம் ஈட்டும் தனிநபர்களின் வருவாய் உயர்ந்து அதன் வழியேயும், பொருளாதாரம் விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் அது வழங்குகிறது என கூறினார். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ரோஜ்கார் மேளா நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது என்றும் அவர் அப்போது கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்