பட்ஜெட் கூட்டத்தொடர்: 27 -ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி, வருகிற 27 ஆம் தேதியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.;
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர், இந்த மாத இறுதியான ஜன. 28- தொடங்கப்படவுள்ளது. தொடர்ந்து, இரு கட்டங்களாக ஏப். 2 ஆம் தேதிவரையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. மத்திய அரசின் 2026 - 2027-க்கான பட்ஜெட் பிப்ரவரியின் முதல் தேதியில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றவுள்ளார். இந்த நிலையில், கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, மரபுப் படி அனைத்துக் கட்சிக் கூட்டமும் 27 ஆம் தேதியில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடரின் விவாதத்துக்கு வரவிருக்கும் முக்கிய பிரச்னைகள், சட்ட மசோதாக்கள், அவையை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.