டெல்லியில் காற்றின் தரம் சற்று முன்னேற்றம்

காற்று சற்று அதிகம் வீசியதால் மாசுபாடு குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-11-30 15:16 IST

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் காற்று மாசு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த செயற்கை மழையை வர வைக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது. அது பற்றிய மறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. காற்றின் தரம் மிகவும் மோசமாகியுள்ளதால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். காற்றுமாசை கட்டுப்படுத்த ஆளும் பா.ஜ.க. அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் இன்று காற்றின் தரம் சற்று முன்னேறியுள்ளது. நேற்று முன்தினம் காற்றின் தரக்குறியீடு 369 ஆக(மிக மோசம்) இருந்த, இன்று சிறிது முன்னேறி காற்றின் தரமானது 270 ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும் இதுவும் மோசம் என்ற அளவிலேயே குறிக்கப்படுகிறது. காற்று சற்று அதிகம் வீசியதால் மாசுபாடு குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஷாதிபூர், ஆர்.கே.புரம் உள்ளிட்ட சில பகுதிகளில் மிக மோசமான பிரிவிலேயே காற்றின் தரம் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்