காருக்கு பதிலாக மாட்டு வண்டியில் வந்து... எளிமையாக நடந்த முதல்-மந்திரி மகனின் திருமணம்; வைரலான வீடியோ
11 மாநிலங்களை சேர்ந்த மந்திரிகள், முதல்-மந்திரிள், எட்டு மாநில ஆளுநர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.;
போபால்,
மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ். இவருடைய இளைய மகன் அபிமன்யு யாதவுக்கும், மணமகள் இஷிடா யாதவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், சமத்துவம், ஒற்றுமை மற்றும் பகிரப்பட்ட கொண்டாட்டம் என்பதற்கான அடையாளங்களில் ஒன்றாக தன்னுடைய மகனின் திருமணம் இருக்க வேண்டும் என முதல்-மந்திரி மோகன் யாதவ் நினைத்துள்ளார்.
இதனையடுத்து, 21 ஜோடிகளின் மெகா திருமண நிகழ்ச்சியில், அவருடைய மகனின் திருமணம் நடைபெறும் என கூறினார். இதன்படி, அபிமன்யுவின் திருமணம் இன்று நடந்தது. அவருடன் 21 ஜோடி மணமக்களின் திருமணமும் நடந்தது. மொத்தம் 22 ஜோடிகளுக்கு திருமணம் சிறப்பாக நடந்தது.
இதனையொட்டி, மணமக்கள் இருவரும் சொகுசு கார்களுக்கு பதிலாக எளிமையான, பாரம்பரிய முறையில் மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்டனர். அபிமன்யுவும், இஷிதாவும் மாட்டு வண்டியில் அமர்ந்தபடி வரும் வீடியோவும் வைரலானது. இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இதில், 11 மாநிலங்களை சேர்ந்த மந்திரிகள், முதல்-மந்திரிள், எட்டு மாநில ஆளுநர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். யோகா குரு ராம்தேவ் உள்பட பல்வேறு சாமியார்களும் பங்கேற்றனர். இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என 25 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். திருமண விழா இன்று முடிந்ததும், அதர்வா ஓட்டலில் பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.