நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: ஜனாதிபதி உரையாற்றுகிறார்

பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.;

Update:2026-01-28 00:04 IST

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்குகிறது. வரும் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத் தொடரை 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இன்று உரையாற்றும் ஜனாதிபதி உரையில், அரசின் கொள்கைகள் உள்ளிட்டவை இடம்பெறும் என தெரிகிறது.இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 2026-2027-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட்டை 9-வது முறையாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. முதல் கட்ட கூட்டத் தொடர் இன்று (புதன்கிழமை) தொடங்கி பிப்ரவரி மாதம் 13-ந் தேதி முடிவடைகிறது. 2-வது கட்ட கூட்டத் தொடர் மார்ச் 9-ந் தேதி தொடங்க இருக்கிறது. இதில், மொத்தம் 30 அமர்வுகள் நடைபெற உள்ளன.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதனிடையே பட்ஜெட்டில் எதற்கு எல்லாம் விலக்கு இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே மக்களிடையே அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு வரி அட்டவணை எப்படி மாறப்போகிறது என்று மாதச் சம்பளம் பெறுவோர் எதிர்பார்க்கிறார்கள்.

உலகளவில் இருக்கும் நிலையற்ற பொருளாதார சூழலில் நடுத்தர வர்க்கத்தினருக்கு திருப்தியளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள பொருளாதார சூழலில் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கவும், நடுத்தர வர்க்கத்தினரின் கைகளில் கூடுதல் பணம் புழங்க வழி செய்யவும், வரிவிலக்கு உச்சவரம்பை உயர்த்துவது காலத்தின் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. புதிய வருமான வரிச் சட்டம்-2025 அமலுக்கு வந்துள்ளதால், பட்ஜெட்டில் மேலும் வரிக்குறைப்புகள், எளிமையான விதிமுறைகள் இருக்கும் என்று வரி செலுத்துவோர் எதிர்பார்க்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்