‘பகவத் கீதை மத நூல் மட்டுமல்ல, உலகத்திற்கான வேதம்’ - துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
பகவத் கீதை தனிநபர்கள், மற்றும் நாடுகளை அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி தொடர்ந்து வழிநடத்தும் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.;
Image Courtesy : ANI
புதுடெல்லி,
அரியானாவின் குருக்ஷேத்திரத்தில் நடைபெறும் சர்வதேச கீதை மஹோத்சவம் நிகழ்ச்சியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட அகில இந்திய தேவஸ்தான மாநாட்டில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
“ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசம் செய்த இடத்தில் நான் நின்று கொண்டிருப்பதை நினைத்து பெருமையாக உணர்கிறேன். அதர்மத்தின் மீதான தர்மத்தின் வெற்றியை குருக்ஷேத்திரம் நமக்கு நினைவுபடுத்துகிறது. அதர்மம் எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும் தர்மம்தான் வெற்றி பெறும்.
பகவத் கீதை மத நூல் மட்டுமல்ல, நீதி, துணிச்சல் மற்றும் ஞான உணர்வுகளை வழங்கும் உலகத்திற்கான வேதம். அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான திறவுகோல். செல்வம் அல்லது பிற உலக சாதனைகளை விட குணம் முக்கியமானது. கீதை மனிதகுலத்தை நல்லொழுக்கமான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கையை நோக்கி வழிநடத்துகிறது. பகவத் கீதை தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளை அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி தொடர்ந்து வழிநடத்தும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.