டிஜிட்டல் கைது: 71 வயது முதியவரிடம் ரூ.1.92 கோடி மோசடி

மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் தங்கள் அனுமதி இல்லாமல் யாரிடமும் எதுவும் பேசக்கூடாது என்று மிரட்டியுள்ளனர்.;

Update:2025-11-30 19:55 IST

ஐதராபாத்,

தொழில்நுட்ப வளர்ச்சியால் நமது வாழ்வை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நவீன கண்டுபிடிப்புகள் நாள்தோறும் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம், தொழில்நுட்ப வளர்ச்சியை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி, அப்பாவி மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் கும்பலும் மற்றொரு புறத்தில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் 'டிஜிட்டல் கைது' என்ற மோசடி வலையில் சிக்கி பலர் தங்கள் பணத்தையும், நிம்மதியையும் இழந்துள்ளனர். 'டிஜிட்டல் கைது' என்பது, மோசடி கும்பல் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை போல பேசி பொதுமக்களை வீட்டில் சிறை பிடித்து பணம் பறிப்பதாகும். இதுபோன்ற டிஜிட்டல் கைது மோசடிகள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் ஐதராபாத்தில் டிஜிட்டல் கைது மோசடி மூலம் 71 வயது முதியவரிடம் ரூ.1.92 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து முதியவருக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு சிலர் பேசியுள்ளனர். முதியவரின் ஆதார் கார்டை பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் முதியவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், தங்கள் அனுமதி இல்லாமல் யாரிடமும் எதுவும் பேசக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன முதியவர் தனக்கு எந்த மோசடியிலும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் மோசடிக்காரர்கள் வீடியோ கால் மூலம் அரசு முத்திரையிட்ட ஆவணங்கள், முதல் தகவல் அறிக்கை உள்பட பல்வேறு ஆதாரங்களை காட்டி முதியவரை மிரட்டியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமானால் பணம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர். இதனை நம்பி மோசடிக்காரர்கள் கூறிய வங்கி கணக்குகளில் ரூ.1.92 கோடி பணத்தை செலுத்தியுள்ளார்.

ஆனால் அதன் பிறகுதான் இது ஒரு மோசடி என்பது முதியவருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட முதியவர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்