இலங்கையில் சிக்கி தவிக்கும் இந்திய பயணிகளை அழைத்து வர மீட்பு விமானங்கள் - தூதரகம் தகவல்

இலங்கையில் சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு இந்தியரும் விரைவில் வீடு திரும்புவார்கள் என்று இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.;

Update:2025-11-30 18:39 IST

புதுடெல்லி,

மழை-வெள்ளம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தில் தமிழர்கள் உள்பட சுமார் 1000 இந்தியர்கள் தவித்து வருகிறார்கள். அவர்கள் உணவு, குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் இந்திய பயணிகளுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் உதவி வருகிறது. இதுதொடர்பாக இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கொழும்பு பண்டார நாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பயணிகளுக்கு இந்திய தூதரகம் உதவிகளை வழங்கி வருகின்றது. விமானப் போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்திய பயணிகளுக்கு உணவு, குடிநீர் வசதிகள் மற்றும் ஏனைய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்து உள்ளது. மேலும் கொழும்பு விமான நிலையத்தில் அவசர உதவி மையத்தை அமைத்து உள்ளது. இந்த நிலையில் கொழும்பு விமான நிலையத்தில் தவித்து வரும் இந்திய பயணிகளை அழைத்து செல்ல மீட்பு விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தூதரகம் கூறும்போது, இலங்கையில் சிக்கி தவித்து வரும் இந்திய பயணிகள் விரைவாக நாடு திரும்ப இந்திய தூதரகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக இந்திய விமான படையின் மீட்பு விமானங்கள் மற்றும் விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இலங்கையில் சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு இந்தியரும் விரைவில் வீடு திரும்புவார்கள் என்று தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்