பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபீனுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

நாடு முழுவதும் நபீன் செல்லும் இடங்களில் எல்லாம் ஆயுதமேந்திய சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு அளிக்கப்படும்.;

Update:2026-01-20 13:03 IST

புதுடெல்லி,

பா.ஜ.க. தேசிய தலைவராக ஜெ.பி. நட்டா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் முன்பே முடிவடைந்து விட்ட போதிலும், சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலை முன்னிட்டு நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவருக்கான தேர்தல் நடத்துவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, நேற்று மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் வேட்புமனு மீதான பரிசீலனை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன்பின்னர் நாளை தேர்தல் நடத்தப்பட்டு, அன்றைய தினமே கட்சியின் புதிய தேசிய தலைவர் யார் என்பது பற்றி அறிவிக்கப்பட்டு விடும்.

இதன்படி, தேர்தலை கே. லட்சுமண் நடத்தினார். இந்நிலையில், அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக செயல்பட்டு வரும் நிதின் நபின் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், போட்டியின்றி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபீனுக்கு இசட் பிரிவு ஆயுத பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) இன்று அறிவித்தது.

கடந்த டிசம்பர் 14-ந்தேதி அக்கட்சியின் நாடாளுமன்ற வாரிய ஒப்புதலுடன், தேசிய செயல் தலைவராக நபீன் நியமனம் செய்யப்பட்ட சில நாட்களில் அவருக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், உளவு துறை அளித்த பாதுகாப்பு ஆய்வு தொடர்பான தகவலை அடுத்து, அவருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உயரிய பாதுகாப்புக்கான உத்தரவை பிறப்பித்து உள்ளது. இந்த புதிய இசட் பிரிவு ஆயுத பாதுகாப்பின்படி, நாடு முழுவதும் நபீன் செல்லும் இடங்களில் எல்லாம் ஆயுதமேந்திய சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு அளிக்கப்படும். அவருடைய வீட்டிலும் இந்த பாதுகாப்பு வழங்கப்படும்.

இந்த சூழலில், பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக நிதின் நபீன் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி முறைப்படி இன்று அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து அவர் பா.ஜ.க. தேசிய தலைவராக இன்று பொறுப்பேற்று கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்