கர்நாடகாவில் போலீஸ் டி.ஜி.பி.யின் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பு

கர்நாடகத்தில் போலீஸ் டி.ஜி.பி.யின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2026-01-20 08:41 IST

பெங்களூரு,

கர்நாடகாவில் டிஜிபி அந்தஸ்து ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், தனது அலுவலகத்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:

கர்நாடகாவில் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டிஜிபியாக இருப்பவர் ராமச்சந்திர ராவ். இவர் தனது அலுவலகத்தில், பணி நேரத்தில் பெண்களுடன் நெருக்கமாக பழகிய வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அவர் பெலகாவியில் இருந்தபோது இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. பெண்களுடன் ராமச்சந்திர ராவ் இருப்பதை யாரோ மர்ம நபர்கள் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையே, வீடியோ தொடர்பாக ராமச்சந்திர ராவ் நிருபர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது,“நான் பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் 8 ஆண்டுகளுக்கு முன்பு, பெலகாவி மண்டல ஐ.ஜி.யாக இருந்தபோது எடுக்கப்பட்டது. அந்த பழைய வீடியோக்களை யாரோ வெளியிட்டுள்ளனர்” என்றார்.

சிறிது நேரத்தில், முதலில் கூறிய கருத்தை ராமச்சந்திர ராவ் மறுத்து, பல்டி அடித்து மீண்டும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,“இந்த வீடியோக்கள் உண்மை அல்ல. அவை போலி வீடியோக்கள். யாரோ சதி செய்து இந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து எனது வக்கீலுடன் ஆலோசித்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரத்தில், போலீஸ் டிஜிபி ராமச்சந்திர ராவ் மாறி மாறி பேசியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. டிஜிபி ராமச்சந்திர ராவ், நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தை ஆவார்.   ராமச்சந்திர ராவ் ஓய்வு பெற இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், அவர் தொடர்பான வீடியோ வெளியாகி  கர்நாடக போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில்  டிஜிபி ராமச்சந்திர ராவ் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்