மத்திய பிரதேசம்: சாலை விபத்தில் 5 பெண்கள் பலி
சிகிச்சை பெறும் 11 பேரில் 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.;
ஜபல்பூர்,
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் பரேலா பகுதியில் ஏக்த சவுக் என்ற இடத்திற்கருகே தொழிலாளர்கள் சிலர் சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, விரைவாக கார் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில், அந்த கார் திடீரென தொழிலாளர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு சூர்யகாந்த் சர்மா கூறும்போது, இந்த சம்பவத்தில், 2 பெண்கள் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் பெண்கள் ஆவர்.
அவர்கள் அனைவரும் மண்ட்லா மாவட்டத்தின் பாம்ஹோரி கிராமத்தில் இருந்து தூய்மை பணிக்காக வந்துள்ளனர். அவர்கள் சாலையோரம் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது இந்த விபத்து நடந்துள்ளது என கூறினார்.
இதுதவிர, சிகிச்சை பெறும் 11 பேரில் 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய டிரைவர் தீபக் சோனி என்பவரை தேடும் பணியில் பரேலா காவல் நிலைய போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, மத்திய பிரதேச பொதுப்பணி துறை மந்திரி ராகேஷ் சிங் வருத்தம் தெரிவித்து உள்ளார். காயமடைந்த நபர்க்ளுக்கு முறையான சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.