மவுனி அமாவாசை: 244 சிறப்பு ரெயில்கள் இயக்கம்; 4.5 லட்சம் பேர் பயணம்
கடந்த ஞாயிற்று கிழமை மவுனி அமாவாசை அன்று பக்தர்கள் திரண்டிருந்தபோது, ஹெலிகாப்டர் வழியே பூவிதழ்கள் தூவப்பட்டன.;
புதுடெல்லி,
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வருடத்திற்கு ஒருமுறை நிகழும் மகா மேளா கடந்த 3-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா மேளாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்தியாவில் மவுனி அமாவாசை சிறப்பாக கொண்டாடப்படும். இந்த முறை கடந்த ஞாயிற்று கிழமை மவுனி அமாவாசை தினம் வந்தது. இதனை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக வடகிழக்கு, வடக்கு மத்திய, வடக்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்கியுள்ளது.
இதன்படி 244 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. கடந்த 3-ந்தேதியில் இருந்து 2 வார காலத்தில் 4.5 லட்சம் பேர் அவற்றில் பயணம் செய்துள்ளனர். பண்டிகை காலத்தில் பாதுகாப்பான மற்றும் இடையூறு இல்லாத பயணம் மேற்கொள்ளும் வகையில் பொதுமக்களின் வசதிக்காக இந்த சிறப்பு ரெயில் சேவை வழங்கப்பட்டது.
இதில், உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் பக்தர்களின் புனித நீராடலை முன்னிட்டு அதிக அளவாக 40 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. ஏறக்குறைய 1 லட்சம் பேர் அவற்றில் பயணித்து உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.
இதில், முதல் நாளில் கங்கை நதி மற்றும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலையில் 9 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர்.
இதேபோன்று, கடந்த ஞாயிற்று கிழமை மவுனி அமாவாசை அன்று பக்தர்கள் திரண்டிருந்தபோது, ஹெலிகாப்டர் வழியே பூவிதழ்கள் தூவப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தன. கடந்த 3-ந்தேதி மகா மேளா தொடங்கியது முதல் மவுனி அமாவாசை அன்று வரை 3 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.