‘பா.ஜ.க. மீண்டும் நிதிஷ் குமாரை முதல் மந்திரி ஆக்கப்போவதில்லை’ - மல்லிகார்ஜுன கார்கே

தனது நாட்டின் நிலைமையை பார்ப்பதற்கு பிரதமர் மோடிக்கு நேரம் இல்லை என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.;

Update:2025-11-03 16:35 IST

பாட்னா,

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் 'மகாகத்பந்தன்' கூட்டணி ஆகிய 2 கூட்டணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், ஜன்சக்தி கட்சி(ராம்விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே போல் ' மகாகத்பந்தன்' கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சியினர் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வைஷாலி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

“மனு ஸ்மிருதியை நம்பும் பா.ஜ.க.வின் மடியில் நிதிஷ் குமார் அமர்ந்திருக்கிறார். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அவரால் போராட முடியாது. ஆனால், தேர்தலுக்குப் பிறகு, பா.ஜ.க. தன்னை மீண்டும் முதல் மந்திரி ஆக்கப்போவதில்ல. அதற்கு பதிலாக அவர்களின் அடித்தொண்டர் ஒருவருக்குப் பதவியை வழங்குவார்கள் என்பதை நிதிஷ் குமார் அறியவில்லை.

பிரதமருக்கு உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய நேரம் இருக்கிறது. ஆனால் தனது நாட்டின் நிலைமையை பார்ப்பதற்கு அவருக்கு நேரம் இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே அவர் இங்கு காணப்படுவார். நகராட்சித் தேர்தல்களின் போது கூட மோடி நகரத்தின் தெருக்களில் சுற்றித் திரிவதை நீங்கள் காணலாம். பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அவரது மகனின் திருமணம் போல ஓய்வில்லாமல் இருக்கிறார்.

மோடி குஜராத்தின் 13.5 ஆண்டுகள் முதல் மந்திரியாக இருந்தார், கடந்த 12 ஆண்டுகளாக பிரதமராக இருக்கிறார். ஆனால் மேற்கு மாநிலத்தையோ அல்லது நாட்டையோ அவரால் வளர்க்க முடியவில்லை. பீகாரின் முதல் மந்திரியாக 9 முறை நிதிஷ் குமார் பதவியேற்று 20 ஆண்டுகள் மாநிலத்தை ஆட்சி செய்த போதிலும், அவரால் வேலைவாய்ப்புகளை வழங்கவோ அல்லது இளைஞர்கள் இடம்பெயர்வதைத் தடுக்கவோ முடியவில்லை.”

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்