பிரதமர் மோடியுடன் கனடா பெண் மந்திரி சந்திப்பு

பிரதமர் மோடியை கனடா வெளியுறவுத்துறை மந்திரி அனிதா ஆனந்த் சந்தித்தார்.;

Update:2025-10-13 20:35 IST

புதுடெல்லி,

அரசு முறை பயணமாக இந்தியா வந்த கனடா வெளியுறவுத்துறை மந்திரி அனிதா ஆனந்த் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளை சேர்ந்த அரசு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அப்போது, ஜெய்சங்கர் கூறுகையில், “இருநாடுகளின் பிரதமர்கள் மற்றும் மக்களின் நலன்களை பூர்த்தி செய்யும் விதமாக, இந்தியா- கனடா நாடுகளின் ஒத்துழைப்பை மீண்டும் கட்டமைக்க வேண்டும். வணிகம், முதலீடு, வேளாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு, ஏ.ஐ., முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன” என்றார்.

கனடா வெளியுறவுத்துறை மந்திரி அனிதா ஆனந்த் கூறும்போது, “இந்தியா- கனடா உறவை மேலும் வலுப்படுத்தும் பணிகளை முன்னெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பரஸ்பர முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்” என தெரிவித்தார். பின்னர் பிரதமர் மோடியை அனிதா ஆனந்த் சந்தித்தார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், “வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறிய பிரதமர் வரும் காலங்களில் கனடா பிரதமருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்” என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்