யாரென்று தெரிகிறதா...? - கொலை வழக்கில் கோர்ட்டில் வாதாடி வைரலான வேதியியல் பேராசிரியைக்கு ஆயுள் தண்டனை

மம்தா பதக்கின் அறிவியல் பூர்வமான வாதத்தை கேட்டு நீதிபதிகள் திகைத்தனர்.;

Update:2025-07-30 17:09 IST

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் சந்தப்பூரை சேர்ந்த ஓய்வுபெற்ற வேதியியல் பேராசிரியை மம்தா பதக். இவரது கணவர் நீரஜ் பதக். நீரஜ் ஓய்வுபெற்ற அரசு டாக்டர் ஆவார். இதனிடையே, கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி நீரஜ் பதக் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், பிரேத பரிசோதனையில் நீரஜ் பதக்கிற்கு தூக்கமாத்திரைகள் கொடுக்கப்பட்டு அவரது உடலில் மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, நீரஜ் பதக்கின் மனைவி மம்தா மீது போலீசாரின் விசாரணை கோணம் திரும்பியது. கணவர் நீரஜ் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக நினைத்து  மம்தா அவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், ஜபல்பூர் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட கோர்ட்டு மம்தா பதக் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

 

இந்த தீர்ப்பை எதிர்த்து மம்தா பதக் மத்தியபிரதேச ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனு கடந்த மே 28ம் தேதி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தன் மீது சுமத்தப்பட்ட கொலை குற்றச்சாட்டுகளை எதிர்த்து மம்தா பதக் வழக்கறிஞர்கள் இல்லாமல் தானே ஆஜராகி வாதிட்டார். அவரது வாதம் நீதிபதிகளை பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது.

ஐகோர்ட்டில் ஆஜரான மம்தா பதக்கிடம், நீங்கள் உங்கள் கணவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளீர்கள். பிரேத பரிசோதனை முடிவுகள் தொடர்பாக நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று நீதிபதி கேட்டார்.

நீதிபதியில் கேள்விக்கு பதில் அளித்த மம்தா கூறூகையில், சார், பிரேத பரிசோதனையின்போது தீக்காயத்தால் ஏற்பட்ட அடையாளத்தையும், மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட காயத்தையும் வித்தியாசப்படுத்தி கண்டுபிடிக்க முடியாது. இந்த வித்தியாசத்தை வெறும் கண்ணால் கண்டுபிடிக்க முடியாது.

மின்சாரம் மனித உடலின் திச்சுக்களுடன் எவ்வாறு தொடர்புகொள்கிறது என்பது மருத்துவ உலோகத் துகள்களின் படிவு, ஆய்வக சோதனைகளில் அமில அடிப்படையிலான பிரிப்புகள் மற்றும் ஆய்வக பகுப்பாய்விற்கு பிறகு மட்டுமே துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். காயமடைந்த திசுக்களை அமில அடிப்படையிலான ஆய்வக பிரிப்பு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பிரேத பரிசோதனை அறையில் இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஆகையால் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை' என்றார். மேலும், தனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

மம்தா பதக்கின் அறிவியியல் பூர்வமான வாதத்தை கேட்டு திகைத்துப்போன நீதிபதிகள், நீங்கள் வேதியியல் பேராசிரியையா? என கேள்வி எழுப்பினர். இதற்கு மம்தா பதக் ஆம் என்று பதில் அளித்தார். கோர்ட்டில் மம்தா பதக் வாதிடும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. பின்னர், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், மம்தா பதக் மீதான கொலை வழக்கு விசாரணை இன்று ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீரஜ் பதக்கை கொலை வழக்கில் அவரது மனைவி மம்தா பதக் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆதாரங்கள், சூழ்நிலைகள் அனைத்தும் மம்தா பதக் அவரது கணவர் நீரஜ் பதக்கிற்கு தூக்க மாத்திரை கொடுத்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ததை உறுதி செய்கிறது என்று கோர்ட்டு தெரிவித்தது. மேலும், குற்றவாளி மம்தா பதக்கிற்கு மாவட்ட கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து, வேதியியல் பேராசிரியை மம்தா பதக் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்