டெல்லி கார் வெடிப்பு; அல்-பலா பல்கலைக்கழக உறுப்பினர் அங்கீகாரத்திற்கு தற்காலிக தடை

இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் பெயர் அல்லது சின்னம் என எதனையும் பயன்படுத்த அல்-பலா பல்கலைக்கழகத்திற்கு அங்கீகாரம் கிடையாது என்றும் குறிப்பிட்டு உள்ளது.;

Update:2025-11-13 21:59 IST

புதுடெல்லி,

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஹுண்டாய் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பயங்கரவாத தாக்குதலாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படும் இந்த சம்பவம் பற்றி என்.ஐ.ஏ. மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி டாக்டர் உமர் உன் நபி டெல்லிக்குள் நுழையும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்துள்ளன. அவருடைய டி.என்.ஏ. பரிசோதனை முடிவில் காரை ஓட்டி வந்தது உமர் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில், டாக்டர் உமர் மற்றும் டாக்டர் முசாமில் ஆகியோர் அல்-பலா பல்கலைக்கழகத்தின் பயிற்சி டாக்டர்கள் ஆவார்கள்.

இந்நிலையில், கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, அல்-பலா பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் அங்கீகாரத்திற்கு இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. அல்-பலா பல்கலைக்கழகத்துடன் அந்த பயிற்சி டாக்டர்கள் இருவருக்கு உள்ள தொடர்பு பற்றி சந்தேகிக்கப்படும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி அந்த பல்கலைக்கழகத்திற்கு, இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. எங்களுடைய அமைப்பின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் வரையிலேயே உறுப்பினருக்கான அங்கீகாரம் அளிக்கப்படும் என அதில் சுட்டி காட்டியிருக்கிறது.

அனைத்து பல்கலைக்கழகங்களும் நல்ல முறையில் நடந்து கொள்ளும்போது அவர்கள் உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். எனினும், ஊடக செய்திகளின்படி, அரியானாவின் பரீதாபாத் நகரிலுள்ள அல்-பலா பல்கலைக்கழகம் நல்ல முறையில் செயல்படாததுபோன்று உள்ளது.

இதனால், உடனடியாக அதன் உறுப்பினர் அங்கீகாரத்திற்கு இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு தற்காலிக தடை விதித்து உத்தரவிடுகிறது என தெரிவித்து உள்ளது.

எனவே, இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் பெயர் அல்லது சின்னம் என எதனையும் பயன்படுத்த அல்-பலா பல்கலைக்கழகத்திற்கு அங்கீகாரம் கிடையாது என்றும் குறிப்பிட்டு உள்ளது. இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்தவும் உத்தரவிட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்