திருப்பரங்குன்றம் விவகாரம்: விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் - சுப்ரீம்கோர்ட்டு அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று ஐகோர்ட்டு மதுரை கிளை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த சூழலில் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் விசாரணை ஐகோர்ட்டு கிளையில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. அப்போது மாவட்ட கலெக்டர், காவல் ஆணையர் நேரில் ஆஜராகவில்லை. இந்த சூழலில் நேற்றைய உத்தரவு நிறைவேற்றவில்லை என மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு விவகாரத்தில் 3 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அதை நிறைவேற்றவில்லை. CISF படையினர் திருப்பரங்குன்றம் சென்று, அங்குள்ள நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் ஏன் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று ஐகோர்ட்டு மதுரை கிளை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டிருந்தநிலையில், ஆவணங்கள் சரியாக கொடுக்கப்பட்டிருந்தால் வரிசையின் அடிப்படையில் விரைவில் பட்டியலிடப்படும் என்று சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.