டெல்லி கார் வெடிப்பு; அமெரிக்கா, சீனா உள்பட உலக நாடுகள் இரங்கல்
இலங்கை ஜனாதிபதி அனுர குமர திசநாயகே, டெல்லி கார் வெடிப்பு சம்பவம் நடந்த இத்தருணத்தில் இந்திய மக்களுக்கு ஆதரவாக துணை நிற்கிறோம் என தெரிவித்து உள்ளார்.;
courtesy: ani
புதுடெல்லி,
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பான பலத்த சத்தம், பல மீட்டர் தொலைவில் இருந்தவர்களுக்கும் கேட்டது.
சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. கார் வெடித்ததும், அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. வேன், ஆட்டோ மற்றும் கார் என 8-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்தன.
இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இதுதவிர 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா, சீனா, இலங்கை, மாலத்தீவுகள், இஸ்ரேல், அயர்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள், நாட்டின் தலைநகர் டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியான சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை இன்று தெரிவித்து உள்ளது.
இதுபற்றி அமெரிக்க வெளியிட்ட செய்தியில், நாங்கள் தொடர்ந்து நிலைமையை உற்றுநோக்கி வருகிறோம் என தெரிவித்து இருக்கிறது. சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான், டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் பற்றி அறிந்து நாங்கள் அதிர்ச்சி அடைந்து விட்டோம் என கூறினார்.
இதேபோன்று இலங்கை ஜனாதிபதி அனுர குமர திசநாயகே, டெல்லி கார் வெடிப்பு சம்பவம் பற்றி அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளோம். இத்தருணத்தில் இந்திய மக்களுக்கு ஆதரவாக துணை நிற்கிறோம் என தெரிவித்து உள்ளார். மாலத்தீவு மற்றும் நேபாள நாடுகளின் முறையே ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து உள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு துணை நிற்கிறோம் என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.