எத்தனால் கலந்த பெட்ரோலால் மைலேஜ் 6 சதவீதம் வரை குறையுமா?- மத்திய அரசு விளக்கம்

எத்தனால் கலந்த பெட்ரோலால் பெரிய அளவில் மைலேஜ் குறையும் என்பது உண்மையல்ல என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.;

Update:2025-08-05 14:48 IST

புதுடெல்லி,

எத்தனால் கலந்த பெட்ரோலால் பெரிய அளவில் மைலேஜ் குறையும் என்பது உண்மையல்ல என்றும் 4 சக்கர வாகனங்களுக்கு 1 - 2 சதவீதம் மற்ற வாகனங்களுக்கு 3 - 6 சதவீதம் வரை மைலேஜ் குறைய வாய்ப்புள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதால் (E20) 4 சக்கர வாகனங்களில் மைலேஜ் பாதிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதனால் எரிபொருள் செயல்திறனில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

E20 எரிபொருள் செயல்திறனை கடுமையாக குறைக்கிறது என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. E10க்கு வடிவமைக்கப்பட்டு E20க்கு மாற்றம் செய்யப்பட்ட வாகனங்களில் மைலேஜ் 1 முதல் 2 சதவீதம் மட்டுமே குறையக்கூடும், மற்ற வாகனங்களில் 3-6 சதவீதம் வரை குறையக்கூடும்.

இன்ஜினில் சரியான மைலேஜ் டியூனிங் செய்தும், சிறந்த உபகரணங்கள் பயன்படுத்தியும் இதைத் தடுக்கலாம். இதனை ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

பழைய வாகனங்களில் ரப்பர் பாகங்கள், காஸ்கெட் போன்ற பாகங்கள், 20 ஆயிரம் கி.மீ.,க்கு பிறகு மாற்ற வேண்டியிருக்கும். அவற்றால் பெரிய செலவு இருக்காது. அவற்றை ரெகுலர் சர்வீஸ் செய்யும்போது மாற்றிக்கொண்டால் போதுமானது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதால் 4 சக்கர வாகனங்களில் மைலேஜ் குறைவாக கிடைப்பதாகவும், இன்ஜின்கள் மற்றும் பெட்ரோல் டேங்குகளில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவின. இந்நிலையில் இந்த தகவல்களை தற்போது மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 



Tags:    

மேலும் செய்திகள்