சுகோயை தொடர்ந்து ரபேல்... மறக்க முடியாத அனுபவம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு

ரபேல் போர் விமானம் மற்றும் இந்திய விமான படையின் செயல் திறன்களை பற்றி ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு விரிவாக எடுத்து கூறப்பட்டது.;

Update:2025-10-29 15:03 IST

அம்பாலா,

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ரபேல் போர் விமானத்தில் இன்று பறந்து சென்றார். அது மறக்க முடியாத அனுபவம் என்று அவர் குறிப்பிட்டார். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ரபேல் போர் விமானங்கள் அரியானாவின் அம்பாலா நகரில் உள்ள இந்திய விமான படையில் சேர்க்கப்பட்டன. இதனால், நாட்டிலேயே முதன்முறையாக ரபேல் போர் விமானங்களை கொண்ட விமான படை தளம் என்ற பெருமையை அம்பாலா விமான படை தளம் பெற்றுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த படை தளத்திற்கு இன்று வருகை தந்துள்ளார். அப்போது அவருக்கு இந்திய விமானப்படை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரபேல் போர் விமானத்தில் பறப்பதற்கான உடைகளை அணிந்து கொண்டு, அதில் இன்று கம்பீரத்துடன் பறந்து சென்றார். அவருடன் இதே விமான படை தளத்தில் இருந்து, இந்திய விமான படையின் தலைமை தளபதி ஏ.பி. சிங்கும் தனியாக ஒரு விமானத்தில் பறந்து சென்றார்.

இதனால், இந்திய விமான படையின் 2 போர் விமானங்களில் பறந்த ஒரே இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றுள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 2023-ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமான படை தளத்தில் சுகோய்-30 எம்.கே.ஐ. போர் விமானத்தில் பயணித்திருந்தார். அதன்பின்னர் இன்று ரபேல் போர் விமானத்தில் பறந்து சென்று வெற்றியுடன் திரும்பியுள்ளார். அவருக்கு முன்பு முன்னாள் ஜனாதிபதிகள் அப்துல் கலாம் மற்றும் பிரதீபா பாட்டீல் ஆகியோர் சுகோய்-30 எம்.கே.ஐ. போர் விமானத்தில் பயணித்திருந்தனர்.

இதுபற்றி அவர் வருகையாளர் புத்தகத்தில் குறிப்பிட்ட பதிவில், இந்திய விமான படையின் ரபேல் போர் விமானத்தில் இன்று முதன்முறையாக பறந்து சென்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு மறக்க முடியாத அனுபவம். இந்த முதல் போர் விமான பயணம் ஆனது, தேசத்தின் பாதுகாப்பு திறன் பற்றிய ஒரு புதிய பெருமைக்குரிய உணர்வை என்னுள் ஏற்படுத்தியது. இதனை வெற்றியுடன் நடத்தி முடித்ததற்காக, இந்திய விமான படை மற்றும் அம்பாலாவின் விமான படை தளத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் நான் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார். இதன்பின்னர் அவரிடம், ரபேல் போர் விமானம் மற்றும் இந்திய விமான படையின் செயல் திறன்களை பற்றி விரிவாக எடுத்து கூறப்பட்டது.

காஷ்மீரின் பஹல்காம் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, 2 வார இடைவெளிக்கு பின்னர் மே 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தொடர்ச்சியாக 4 நாட்கள் இந்தியா சார்பில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் உட்கட்டமைப்புகள் தாக்கி அழிக்கப்பட்டன. அந்த தாக்குதல்களை நடத்துவதற்கு ரபேல் போர் விமானங்கள் உதவியாக இருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்