இதற்காக... ரூ.300 கோடி நிதி திரட்டிய சித்தராமையா: பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, அமைச்சரவையின் சக மந்திரிகளுக்கு இரவு விருந்து அளித்தபோது நிதி திரட்டினார் என பா.ஜ.க. மூத்த தலைவர் ஸ்ரீராமுலு கூறினார்.;
பெங்களூரு,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், பதவியை காப்பாற்றி கொள்வதற்காக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, மாநில மந்திரிகளிடம் இருந்து ரூ.300 கோடி நிதியை திரட்டியுள்ளார் என பா.ஜ.க. மூத்த தலைவர் ஸ்ரீராமுலு, சித்ரதுர்கா நகரில் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
சமீபத்தில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தன்னுடைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மந்திரிகளுக்கு இரவு விருந்து அளித்தபோது இந்த நிதியை திரட்டினார் என்றும் பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், நவம்பர் 15-ந்தேதி சித்தராமையா டெல்லி செல்ல உள்ளார். அவருடைய முதல்-மந்திரி நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. அதனை காப்பாற்ற போராடும் முயற்சியில் அவர் உள்ளார். நவம்பர் 15-ந்தேதிக்கு பின்னர் என்ன புரட்சி ஏற்பட போகிறது என நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என அவர் குறிப்பிட்டார்.