பிரதமர் பாதுகாப்பு வாகன ஒத்திகையில் குறுக்கே சென்ற சிறுவனை அடித்த காவலர்; வைரலான வீடியோ
பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகன ஒத்திகையின்போது, குறுக்கே சைக்கிளில் சென்ற சிறுவனை காவலர் அடித்த சம்பவம் சர்ச்சையாகி உள்ளது.;
சூரத்,
குஜராத்தின் சூரத் நகரில் பிரதமர் மோடி இன்று வாகன பேரணி நடத்தினார். அவரை காண்பதற்காக சாலையின் இரு பகுதிகளிலும் மக்கள் திரண்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் மற்றும் பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், நிகழ்ச்சிக்கு முன், குஜராத்தின் சூரத் நகரில் ரத்தன் சவுக் பகுதியில், பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அவருடைய பாதுகாப்பு வாகனங்கள் வரிசையாக சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டன. பிரதமரின் வருகையின்போது, பாதுகாப்பு குறைபாடுகள் எதுவும் இல்லை என உறுதி செய்து கொள்வதற்காக இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.
அப்போது, 17 வயது சிறுவன் ஒருவன் அந்த சாலையில் மற்றொருபுறம் ஓரத்தில், சைக்கிளில் பயணித்தபடி சென்றுள்ளான். திடீரென வாகன வரிசையை நோக்கி சென்று, பின்னர் சைக்கிளை திருப்பி ஓட்டி சென்றுள்ளான்.
சிறிது நேரத்தில், அந்த சிறுவனை உதவி காவல் ஆய்வாளரான பி.எஸ். கத்வி தடுத்து நிறுத்தியுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னிட்டு அதற்கு உதவியாக பணியில் இருந்த கத்வி, சிறுவனுடைய தலைமுடியை பிடித்து, இழுத்து ஆவேசத்தில் கன்னத்தில் அறைந்து விட்டார். இந்த சம்பவம் பற்றிய வீடியோ ஒன்று வைரலானது.
இதுபற்றி சிறுவனின் உறவினர் ஒருவர் கூறும்போது, சிறுவன் பல மணிநேரம் கழித்து இரவு 9.30 மணியளவில் அழுது கொண்டே வீட்டுக்கு வந்துள்ளான். அவனை போலீசார் அடித்து விட்டனர். ஆனால், எதற்காக அடித்தனர் என தெரியவில்லை என குடும்பத்தினரிடம் கூறினான்.
காவல் நிலையத்திற்கு அவனை அழைத்து சென்றுள்ளனர். அவனை அடிப்பதற்கு பதிலாக, காவலர்கள் ஆலோசனை வழங்கியிருக்க வேண்டும் என அந்த உறவினர் கூறியுள்ளார். இதற்கு சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். காவலர் அவருடைய கடமையை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோதும், சிறுவனுக்கு ஆலோசனை வழங்கியிருக்கலாம் என சிலர் கூறுகின்றனர்.
இதுபற்றி காவல் துறையை சேர்ந்த துணை ஆய்வாளர் அமித வனானி கூறும்போது, கத்வியின் அணுகுமுறை முற்றிலும் முறையற்றது. அது வருத்தத்திற்குரியது என கூறினார். மோர்பி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியில் இருந்த கத்வி, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். ஓராண்டுக்கு கத்வியின் சம்பள உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.