கர்நாடகாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நான்தான் முதல்-மந்திரி: சித்தராமையா
சித்தராமையாவிடம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்களே முதல்-மந்திரியாக பதவி வகிப்பீர்களா? என செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.;
சிக்கபள்ளாபுரா,
கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ.க.வை வீழ்த்தி பெருமளவிலான தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது, சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார்கள் என யூகங்கள் வெளிவந்தன. சுழற்சி முறையில் பதவி பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
இதனை அக்கட்சி மறுக்கவோ அல்லது அதனை உறுதி செய்யவோ இல்லை. இந்நிலையில், முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக சிவக்குமாரும் பதவியேற்றனர். இந்த சூழலில், கர்நாடகாவில் முதல்-மந்திரியை மாற்றம் செய்வதற்கான சாத்தியம் பற்றி அக்கட்சியின் தலைவர்கள் வெளிப்படையாக ஆலோசித்து வருகின்றனர் என தகவல் வ்ளியானது.
வருகிற அக்டோபரில் இந்த பதவி மாற்றம் இருக்கும் என்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறி வருகின்றனர். இதுபற்றி அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் செய்தியாளர்கள் சமீபத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அது கட்சியின் உயர்மட்ட தலைமையின் கைகளில் உள்ளது. உயர்மட்ட அளவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி ஒருவரும் கூற முடியாது.
இதுபற்றிய முடிவு மேலிடத்திடமே விடப்பட்டு விட்டது. நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் கட்சியின் தலைமையிடமே உள்ளது என அவர் கூறினார்.
இரண்டரை ஆண்டு காலம் என்றால், சித்தராமையாவின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதத்துடன் முடிவடையும். இதனால் டி.கே. சிவக்குமார் முதல்-மந்திரி ஆவார் என அவரது ஆதரவாளர்கள் கருத்து கூறி வருகிறார்கள். இந்த நிலையில் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசி வருகிறார். இது, முதல்-மந்திரி மாற்றத்திற்காகதான் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முதல்-மந்திரி சித்தராமையாவிடம், கர்நாடகாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்களே முதல்-மந்திரியாக பதவி வகிப்பீர்களா? என செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஆம். நானே பதவியில் நீடிப்பேன். உங்களுக்கு அதில் என்ன சந்தேகம் உள்ளது? என பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் கட்சி ஒன்றுபட்டு உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு பாறை போன்று ஆட்சி அதிகாரத்தில் நீடிக்கும் என்றும் கூறினார். அதனால், அடுத்த 5 ஆண்டுகள் முழுவதும் அவர் பதவியில் இருப்பார் என உறுதிப்படுத்தி உள்ளார்.