வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெற்றோரின் நிலையை அறிந்த கீர்த்தி பணம் கேட்க முடியாமல் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் குருபிரசாத். இவருக்கும் கீர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மேலும் இந்த திருமணத்துக்காக கீர்த்தியின் பெற்றோர் ரூ.35 லட்சம் வரை செலவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் திருமணமான முதல் தம்பதி சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் குருபிரசாத் சொந்தமாக வீடு கட்ட முயற்சி செய்து வந்துள்ளார். இதில் அவருக்கு அதிக பணம் தேவைப்பட்டதாக தெரிகிறது. ஆகையால் தனது மனைவியிடம் உனது பெற்றோரிடம் பணம் வாங்கி தருமாறு குருபிரசாத் கூறியுள்ளார்.
ஆனால் கீர்த்தி இதனை மறுத்து தனது திருமணத்துக்கே பெற்றோர் அதிக செலவு செய்ததாக கூறியுள்ளார். இருந்த போதிலும் குருபிரசாத் தனக்கு கொடுத்த வரதட்சணை குறைவாக உள்ளது. தனக்கு கூடுதல் வரதட்சணை வேண்டும் என்று கேட்டு கடந்த 2 மாதங்களாக கீர்த்தியை குருபிரசாத் துன்புறுத்தியுள்ளார். இதனை கீர்த்தி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
பின்னர் கீர்த்தியின் பெற்றோர் கடந்த மாதம் டிசம்பரில் வங்கி மற்றும் பிற நபர்களிடம் இருந்து கடனாக ரூ.8 லட்சத்தை குருபிரசாத்திடம் கொடுத்து உள்ளனர். அதனை பெற்றுக்கொண்ட குருபிரசாத் தற்போது மீண்டும் கூடுதல் வரதட்சணை வேண்டும் என்று கீர்த்தியை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். இருப்பினும் தனது பெற்றோரின் நிலையை அறிந்த கீர்த்தி பணம் கேட்க முடியாமல் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கடந்த 24-ந்தேதி இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கீர்த்தி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த கணவர் உடனடியாக கீர்த்தியை மீட்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு கீர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து கீர்த்தியின் பெற்றோர், பனசங்கரி போலீசில் வரதட்சணை கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், மகளின் சாவுக்கு கணவர் குருபிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவர் குருபிரசாத்தை பிடித்து விசாரித்து வருகின்றனர்.