இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல் - மத்திய மந்திரி சர்பானந்த சோனோவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
இந்தியாவின் தொழில்நுட்ப திறன்கள் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ளன என்று சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பலை மத்திய மந்திரி சர்பானந்த சோனோவால் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூய்மையான மற்றும் நிலையான உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை உறுதி செய்வதில் இது ஒரு முக்கியமான மைல்கல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரணாசியில் உள்ள நமோ காட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை மந்திரி சர்பானந்த சோனோவால், இந்த கப்பலின் வணிகச் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் கப்பல்களை இயக்கும் சீனா, நார்வே, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது இணைந்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.
ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் இந்த கப்பல், இந்தியாவின் தொழில்நுட்பத் திறன்களையும், நிலையான எரிசக்தி மீதான நமது அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்ட அவர், இது வெறும் தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல, பசுமை ஆற்றல் மற்றும் உள்நாட்டுத் தீர்வுகளை நோக்கி நாம் நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்கிறோம் என்பதற்கான ஒரு அறிகுறி என்று கூறினார்.
நமது தொழில்நுட்ப திறன்கள் எதிர்காலத்திற்குத் தயாராக இருப்பதாகவும், பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையால் இது சாத்தியமாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அதோடு, இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் உள்நாட்டு நீர்வழிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று மத்திய மந்திரி சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.