பெற்ற தாயை காலால் மிதித்து, செருப்பால் கொடூரமாக தாக்கிய மகள் - வைரல் வீடியோ

குடும்ப பிரச்சினை தொடர்பாக தாய்-மகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.;

Update:2025-11-30 08:52 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு புறநகர் மூடுஷெட்டே கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட சிவநகர் பகுதியில் தாயும், மகளும் வசித்து வருகிறார்கள். அவர்கள் 2 பேருக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறு தொடர்பாக மூதாட்டி, தனது மகள் மீது காவூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதன்பிறகு போலீசார் அவர்கள் 2 பேரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்களின் சண்டை மட்டும் ஓயவில்லை. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மகள் மீது புகார் அளிக்க மூடுஷெட்டே கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்கு மூதாட்டி சென்றுள்ளார். இதனை அறிந்த அவரது மகள் அங்கு வந்துள்ளார்.

கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து தாய்க்கும், மகளுக்கும் இடையே திடீரென்று சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் பெற்ற தாய் என்றும் பாராமல் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து மூதாட்டியை அந்த பெண் வெளியே இழுத்து வந்துள்ளார். பின்னர் மூதாட்டியை காலால் எட்டி மிதித்து கீழே தள்ளியதுடன், கீழே விழுந்து கிடந்த அவரை கொஞ்சம் கூட ஈவு, இரக்கமின்றி அந்த பெண் கொடூரமாக தாக்கி உள்ளார்.

அத்துடன் தான் அணிந்திருந்த செருப்பை கழற்றியும் மூதாட்டியை அவர் கொடூரமாக தாக்கி உள்ளார். இந்த தாக்குதலில் மூதாட்டி லேசான காயம் அடைந்தார். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சண்டையை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் வயதானவர் என்று கூட பாராமல் தாக்கிய பெண்ணுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த வீடியோவை பார்த்த மாநகர போலீஸ் கமிஷனர் சுதீர்குமார் ரெட்டி, புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வீடியோவை பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்