பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை; நிதின் நபீன் தலைவரானது பற்றி எதிர்க்கட்சிகள் பரபரப்பு குற்றச்சாட்டு
அமித்ஷாவும், பிரதமர் மோடியும் மட்டுமே முடிவுகளை எடுக்கிறார்கள். அதனை மீண்டும் நிரூபித்துள்ளனர் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறினார்.;
புதுடெல்லி,
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம், சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலை முன்னிட்டு நீட்டிக்கப்பட்ட நிலையில், பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவருக்கான தேர்தல் நடத்துவது பற்றிய அறிவிப்பு வெளியானது.
இதன்படி, நேற்று முன்தினம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில், அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக செயல்பட்டு வரும் நிதின் நபின் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், போட்டியின்றி தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக நிதின் நபீன் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி முறைப்படி நேற்று அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து அவர் பா.ஜ.க. தேசிய தலைவராக நேற்று மதியம் பொறுப்பேற்று கொண்டார். டெல்லியில் கட்சி தலைமையகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நிதினை வாழ்த்தினார்.
இதன்பின்னர் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும்போது, கட்சி என வரும்போது, நிதின் நபீன்தான் பாஸ். நான் கட்சியின் ஒரு சிறிய தொண்டன். தற்போது மதிப்பிற்குரிய நிதின் நபீன்தான் நம் அனைவருக்கும் தலைவர். பா.ஜ.க.வை நிர்வகிப்பது மட்டுமே அவருடைய பொறுப்பு அல்ல. அதனையும் கடந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து கட்சிகள் இடையேயும் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கூறினார்.
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக உள்ளது. அது நடக்க வேண்டும் என விதிக்கப்பட்டு விட்டது. இந்த முக்கிய காலகட்டத்தில் நம்முடைய நிதின் நபீன் அவர்கள் பா.ஜ.க.வின் மரபை முன்னெடுத்து செல்வார் என்றும் பேசினார்.
கட்சியுன் புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்ற நிதின் நபின் கூறும்போது, கேரளா, தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளத்தில் வரவிருக்கும் தேர்தல்களில் நாம் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்ய வேண்டும்.
இந்த மாநிலங்களில் மக்கள்தொகை தொடர்பான விவகாரம் பற்றி பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மாறி வரும் மக்கள்தொகை அமைப்பு அங்குள்ள சூழலை மாற்றுகிறது. இது நமக்கு சவாலை ஏற்படுத்துகிறது. இருப்பினும் தொண்டர்கள் கடினமாக உழைத்து இந்த 5 மாநிங்களிலும் பா.ஜ.க.வை வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என கூறினார்.
எனினும், பா.ஜ.க.வில் தேர்தல் நடைமுறை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளன. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறும்போது, அமித்ஷாவும், பிரதமர் மோடியும் மட்டுமே முடிவுகளை எடுக்கிறார்கள். அதனை மீண்டும் நிரூபித்து இருக்கின்றனர். தேர்தல் இல்லை எனில் தேர்தல் அதிகாரிக்கு என்ன வேலை? நாங்களும் தேர்தல் நடத்தினோம்.
கார்கேவும், சசி தரூரும் வேட்பாளர்களாக இருந்தனர். வாக்குப்பதிவு நடந்தது. இதுவே ஜனநாயகம். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தொண்டர்கள் அனைவரின் பங்கையும் எடுத்து கொள்ள விரும்புகிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட கட்சியான பா.ஜ.க. சர்வாதிகார ஆட்சியை நோக்கி பயணிக்கிறது என கூறினார்.
ராஷ்டீரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா கூறும்போது, அது பா.ஜ.க.வின் உட்கட்சி விவகாரம். ஆனால், இதில் தேர்தல் நடைமுறை உள்ளது என்பது போன்ற ஒன்றே இல்லை. நடந்தவை எல்லாம் முன்பே முடிவு செய்யப்பட்டவை. நிதினுக்கு வாழ்த்துகள் என கூறினார்.
இதேபோன்று, பா.ஜ.க. தேசிய தலைவராக இளம் தலைவர் கிடைத்திருக்கிறார். நமக்கு இளம் பிரதமரும் கிடைக்க போகிறார் என மராட்டிய காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே கிண்டலாக கூறினார்.