ஜெகதீப் தன்கர் ராஜினாமா: மத்திய மந்திரிகள் அவசர ஆலோசனை
மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் இன்றைய அவையை நடத்தினார்.;
புதுடெல்லி,
நாட்டின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது உடல் நிலையை காரணம் காட்டி, துணை ஜனாதிபதி பதவியை நேற்று இரவு திடீரென்று ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பிவைத்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று கூடியது. முதல் நாளே மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா புரிந்துகொள்ள முடியாத அதிர்ச்சியாக உள்ளது. நீதித்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை இன்று அவர் வெளியிட இருந்தார்.உடல் நிலையில் தன்கர் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இருப்பினும், இந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஜெகதீப் தன்கர் நேற்று ராஜினாமா செய்த நிலையில், மத்திய மந்திரிகள் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் ஆலோசனையில் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெ.பி.நட்டா, ஜெய்சங்கர், சிவராஜ் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அடுத்த துணை ஜனாதிபதி யார்? என்று இதில் விவாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஜெகதீப் தன்கருக்கு பிரிவு உபசார உரை நிகழ்த்த வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர் இன்றைய மாநிலங்களவை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவையை நடத்தினார்.