கேரளா: இந்திய விளையாட்டு ஆணைய விடுதியில் 2 சிறுமிகள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுப்பு
இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு பல்வேறு விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் மாணவிகள் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை பயிற்சிக்கு மாணவிகள் அனைவரும் சுமார் 5 மணியளவில் மைதானத்திற்கு வந்த நிலையில், 2 சிறுமிகள் மட்டும் வரவில்லை. அவர்களின் அறைக்கதவும் பூட்டப்பட்டு கிடந்தது.
இதையடுத்து விடுதி நிர்வாகத்தினர் கதவை உடைத்து திறந்தபோது உள்ளே 2 சிறுமிகளும் தூக்கில் தொடங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் ஒரு சிறுமியின் வயது 17. அவர் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர். மற்றொரு சிறுமியின் வயது 15. அவர் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் தனித்தனி அறைகளிலேயே தங்கியிருந்த நிலையில், நேற்று இரவு ஏன் இருவரும் ஒரே அறையில் தங்கினார்கள்? அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது தற்கொலையா? என பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.