மராட்டிய உள்ளாட்சி தேர்தல்; பட்டியலில் என் பெயர் இல்லை: சிவசேனா பெண் எம்.பி. பரபரப்பு பேட்டி
மும்பையில் உள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வரும்படி வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன் என எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறினார்.;
புனே,
இந்தியாவில் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் ஓய்ந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
அனைத்து 29 மாநகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 29 மாநகராட்சிகளிலும் 2 ஆயிரத்து 869 கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க 15 ஆயிரத்து 931 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களை தேர்ந்தெடுக்க 3 கோடியே 48 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
வாக்கு பதிவையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள், வயது முதிர்ந்தோர், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்தனர்.
இந்நிலையில், சிவசேனா (உத்தவ் தாக்கரே) பெண் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்றார். ஆனால், அவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என கூறப்படுகிறது. இதுபற்றி அவர் கூறும்போது, நான் வழக்கம்போல் வாக்கு மையத்திற்கு சென்றபோது, பட்டியலில் என்னுடைய பெயர் இல்லை என தெரிய வந்தது.
இதன்பின்னர் வேறொரு பகுதிக்கு செல்லும்படி என்னிடம் கூறினர். அந்த பகுதியில் உள்ள வாக்கு மையத்திற்கு சென்று நான், என்னுடைய வாக்கை செலுத்தினேன். மும்பையில் உள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வரும்படி வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன். வாக்களிக்க செல்வதற்கு முன்பு, வாக்கு மைய விவரங்களை பற்றி தெரிந்து கொண்டு செல்லுங்கள் என்று அவர் கூறினார்.