காதல் படங்களை போன்ற வாழ்க்கை அமையும் என்ற கனவில்... வாலிபருடன் சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்

டெல்லியில், காதல் திரைப்படங்களில் வருவது போன்று வாழ்க்கை அமையும் என்ற கனவில் வாலிபருடன் சென்ற சிறுமியை போலீசார் ஓராண்டுக்கு பின் மீட்டுள்ளனர்.;

Update:2025-03-23 19:29 IST

புதுடெல்லி,

டெல்லியின் வடக்கு புறநகர் பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமி 2024-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந்தேதி நரேலா பகுதியில் இருந்து காணாமல் போனார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் விசாரணையில் ஈடுபட்டது.

அதனுடன், சிறுமி பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு பணம் கிடைக்கும் என அறிவித்தனர். இதனை தொடர்ந்து, இணையதள குற்ற பிரிவு போலீசார் சிறப்பு படை அமைத்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், சி.சி.டி.வி. கேமரா பதிவை ஆய்வு செய்ததில், சிறுமி புதுடெல்லி ரெயில் நிலையத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் செல்லும் ரெயிலில் ஏறியுள்ளார். அதன்பின்னர், மும்பை, ஆக்ராவுக்கு சென்ற சிறுமி கடைசியாக தாஜ்மகால் அருகே வசித்து வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

இதனால், ஓராண்டாக காணாமல் போன சிறுமியை, போலீசார் அந்த பகுதிக்கு சென்று பாதுகாப்பாக மீட்டனர். வீட்டின் அருகே வசித்து வந்த, முன்னாள் பள்ளி மாணவரான 19 வயது வாலிபருடன் அந்த சிறுமி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

காதல் காட்சிகள் கொண்ட திரைப்படங்களில் வருவது போன்று அவர்களுடைய வாழ்க்கை பயணம் அன்பு மற்றும் சாதனை நிறைந்த ஒன்றாக அமையும் என சிறுமி கனவு கண்டிருக்கிறார். ஆனால், நடந்ததோ வேறு. மும்பை சென்றதும் வாழ்வில் அதிருப்தி ஏற்பட்டது. நினைத்ததுபோல் எதுவும் நடக்கவில்லை.

இதன் பின்னர் ஆக்ராவுக்கு சென்றுள்ளார். வீட்டை விட்டு சென்றவர், ஊருக்கு திரும்பவும் வழி தெரியாமல், பிழைப்புக்காக வேலை ஒன்றை அவராகவே தேடி கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார். என போலீசார் தெரிவித்து உள்ளனர். எனினும், சிறுமியுடன் சென்ற நபரை பற்றிய விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்