மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை; அதிர்ச்சி சம்பவம்
சிறுமிகளை பரிசோதித்த டாக்டர்கள் உடல்நலக்குறைவு குறித்து தாயாரிடம் விசாரித்துள்ளனர்.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் பளி மாவட்டம் சர்தார் பகுதியைசேர்ந்த பெண் தனது 2 மகள்களுக்கும் (18 வயதிற்கு உள்பட்ட சிறுமிகள்) உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். சிறுமிகளை பரிசோதித்த டாக்டர்கள் உடல்நலக்குறைவு குறித்து தாயாரிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது, அந்த சிறுமிகளின் தந்தை பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக சிறுமிகளுக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமிகளின் தாயாருக்கு தெரிந்தபோதும், அவர் எந்த வித புகாரும் அளிக்காமல் இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து டாக்டர்கள், தொண்டு அமைப்பின் உதவியுடன் இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தெரியப்படுத்தினர். இதையடுத்து, அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தனது கணவர் மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை அப்பெண் ஒப்புக்கொண்டார். உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.